திருச்சிராப்பள்ளி: நலத்திட்டங்களுக்குக் கருணாநிதியின் பெயர் வைக்காமல், கரப்பான் பூச்சியின் பெயரையா வைக்க முடியும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இன்று முதல் தொடங்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியின் கழக நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், துறையூரில் கலைஞர் நூலகம் மற்றும் கலைஞர் சிலை திறப்பு உள்ளிட்ட பல்வேறு கழக நிகழ்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று, சனிக்கிழமை (நவ.23) விமானத்தின் மூலமாக திருச்சிக்கு வருகை புரிந்தார். அவருக்கு திமுவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu) துறையூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து அவரது பெயரில் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதன்படி, இன்று துறையூரிலும் சிலை நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து, கலைஞர் நூலகம், மருத்துவமனை, விளையாட்டரங்கம் எனக் கருணாநிதி பெயரில் பல்வேறு திட்டங்கள் இப்பகுதியில் கொண்டுவரப்பட்டுள்ளது.
கரப்பான் பூச்சி பெயரையா வைக்க முடியும்?:
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து திட்டங்களுக்கும் கலைஞர் பெயரையே வைக்கிறீர்களே. வேறு பெயர் வைக்க முடியாதா? என கேள்வி எழுப்பியுள்ளார். நல்ல திட்டங்களுக்குக் கருணாநிதி பெயர் வைக்காமல், கரப்பான் பூச்சி பெயரையா வைக்க முடியும்? கரப்பான் பூச்சி என்று யாரைச் கூருகிறேன் என்று உங்களுக்கு தெரியும்.
இதையும் படிங்க:சமூகநீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழா: பாமக இராமதாசுக்கு அழைப்பு - அமைச்சர் பொன்முடி!
மேலும், எந்த தகுதியை வைத்து உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கு இருக்கும் தகுதி எனக்கு கிடையாது. ஏனெனில், நான் கூவத்தூரில் யார் காலிலும் விழுந்து இந்த பொறுப்புக்கு வரவில்லை. எத்தனையோ பொறுப்புகள் இருந்தாலும், நான் உங்கள் வீட்டுப் பிள்ளையாக கருணாநிதியின் பேரனாகவே இருப்பேன்.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது போன்று, வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு, இன்று முதல் கழகத்தின் திட்டக்களின் பிரச்சார பணிகளை தொடங்குவோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்