சென்னை:தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஆகையால் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, திரைப்பட நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், தனுஷ், சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் அலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின், பல்வேறு வகையான நலதிட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் பேச்சு (Etv Bharat Tamil Nadu) இதனையடுத்து நிகழ்ச்சி மேடையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை மக்கள் தந்துள்ளார்கள்.
இந்த வெற்றியானது நம் நல்லாட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ் ஆகும். அதைவிட வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 இடங்களில் குறைந்தது 200 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். அதனை நாம் ஏற்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆகும். வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும் மக்களிடம் அரசின் திட்டங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் சென்று வந்தேன் அங்கு மக்களின் எழுச்சி சிறப்பாக உள்ளது. மீண்டும் 7வது முறையாக திமுக ஆட்சி அமைப்பது உறுதி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வராகப் போவதும் உறுதி. தேர்தல் வேலையை முதன்முதலில் திமுக தான் துவங்கியது. அதேபோல் தேர்தல் முடிவிலும் திமுக தான் முதலில் வரும்.
இதையும் படிங்க:"குற்றங்களை கண்டுபிடிப்பதல்ல; தடுப்பதுதான் சாதனை": காவல் துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
அதிமுக கள ஆய்வு நடத்துகிறோம் என கூறிக்கொண்டு கலவர ஆய்வை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் அனைத்து நிகழ்ச்சிகளில் சண்டை தான் நடக்கிறது. அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பொது நிகழ்ச்சியில் ஒன்றில்,'கூட்டணிக்கு அழைத்தால் 100 கோடி கேட்கிறார்கள்.
20 தொகுதி கேட்கிறார்கள் என பேரம் பேசுவதாக' வெளிப்படையாகக் கூறிவிட்டார். ஆனால் நம்முடைய கூட்டணி அப்படி அல்ல, அது வெற்றிக் கூட்டணி. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த சட்ட மன்ற தேர்தலிலும் வெற்றி பெற அனைத்து தோழர்களும் உறுதி ஏற்க வேண்டும். என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்