சென்னை:வடக்கிழக்கு பருவமழை நேற்று துவங்கியுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
துணை முதல்வர் ஆய்வு:இந்த நிலையில் சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் வரத்து அதிகமாகி வருகிறது. இச்சூழலில் செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதில் ஏரியில் தண்ணீர் இருப்பு எவ்வளவு உள்ளது. மதகுகளின் உறுதிதன்மை, ஏரி முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.