சென்னை:சென்னை விருகம்பாக்கம் பகுதியில் நடிகையும், நடிகர் பொன்வண்ணனின் மனைவியுமான சரண்யா வீடு உள்ளது. இவரது பக்கத்து வீட்டில் ஸ்ரீதேவி என்ற பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு ஸ்ரீதேவி தனது கணவருடன் வெளியே செல்வதற்காக, காரை வீட்டிலிருந்து வெளியே எடுத்தாக தெரிகிறது.
அப்போது தங்கள் வீட்டின் 10 அடி அகலம் கொண்ட கேட்டை திறந்துள்ளார். அந்த கேட் நடிகை சரண்யாவின் காரில் இடிப்பதுபோல் சென்று அருகே நின்றுள்ளது. இதனால் நடிகை சரண்யாவுக்கும், ஸ்ரீதேவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சரண்யா மற்றும் அவரது குடும்பத்தினர், தங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆபாசமாக திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக ஸ்ரீதேவி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் அவர் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்த நடிகை சரண்யா மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இந்தத் தகராறு தொடர்பான சிசிடிவி பதிவுகள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.