சென்னை: 'பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை முடிந்த பிறகு, கொலை வழக்கின் கீழ் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்' என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்து வந்த சதீஷ் என்பவரும் காதலித்து வந்த நிலையில், சத்யபிரியாவின் பெற்றோர் எதிர்ப்பால் காதலர் சதீஷுடன் பேசுவதை சத்யபிரியா திடீரென நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022 அக்டோபர் 13 ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, தாம்பரம் மார்க்கம் சென்ற மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்து சதீஷ் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சிபிசிஐடி காவல்துறை, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிபிசிஐடி தரப்பில் ரயில் நிலையங்களில் இருந்தவர்கள் நேரடி சாட்சிகள் என 70 பேரிடம் விசாரணை செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், டிச 27ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி ஸ்ரீதேவி, குற்றம் சாட்டப்பட்ட சதீஷை குற்றவாளி என அறிவித்தார். தண்டனை விவரம் டிசம்பர் 30ம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:யார் அந்த சார்..? எப்ஐஆரில் கூறப்பட்டிருப்பது என்ன..? அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கிளம்பும் கேள்விகள்!
அதன்படி, இந்த வழக்கில் தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி ஸ்ரீதேவி, '' சதீஷ் மீதான குற்றத்தை அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. இதுபோன்ற கடுமையான குற்றங்களை செய்தவர்கள் மீது இரக்கம் காட்ட முடியாது. குற்றவாளி சதீஷுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றவாளியை சாகும் வரை தூக்கிலிட வேண்டும். 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
மேலும், இறந்த சத்யபிரியாவுடைய இரண்டு சகோதரிகளுக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் சகோதரிகளுக்கு 10 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் இழப்பீடாக வழங்க வேண்டும். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை முடிந்த பிறகு, கொலை வழக்கின் கீழ் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.