பட்டியலின பெண் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய 'செயில் ரிப்ரேக்டரி' நிறுவன காவலாளி சேலம்: மாமாங்கம் பகுதியில் உள்ள ‘செயில் ரிப்ரேக்டரி’ நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த பட்டியலினத்தை சேர்ந்த பெண் உதவியாளரை, இன்று (ஏப்.13) அந்நிறுவன அதிகாரிகள் கண்மூடித்தனமாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாமாங்கம் பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ‘செயில் ரிப்ரேக்டரி’ நிறுவனத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் (53) ஒருவர் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். கரூப்பூரைச் சேர்ந்த இவர், ஒப்பந்த அடிப்படையில் அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இவரை, வயது மூப்பு காரணமாகவும், பட்டியலின பெண் என்பதாலும் இனி வேலைக்கு வரக்கூடாது என அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று (ஏப்.13) காலை மீண்டும் வேலைக்குச் சென்ற அவரை, அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், காவலாளிகள் மூலமாக நிறுவனத்திற்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்களிடம், தனக்கு ஏன் வேலை வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட பட்டியளினப் பெண் தட்டி கேட்டதால், அந்நிறுவன ஊழியர்கள் அவரை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் நிலைகுலைந்து சாலையில் மயங்கி கிடந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல் நிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பட்டியலின பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், “வயது மூப்பு ஏற்பட்ட காரணத்தினால், இனி வேலைக்கு வரக்கூடாது, இளம் பெண்களை மட்டுமே இனி வேலைக்கு சேர்த்துக் கொள்வோம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். பட்டியல் இனத்தவர் என்பதால் வீட்டு வேலைக்கு அமர்த்த முடியாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். தனக்கு ஏன் வேலை வழங்கவில்லை என்று தட்டி கேட்ட அவரை காவலர்களை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் தலை முடியை பிடித்து இழுத்துச் சென்று வெளியே தள்ளியும், பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும் துன்புறுத்தியுள்ளனர் . காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி அந்நிறுவன அதிகாரிகள் சித்ரா, மிஸ்ரா, முருகேசன் மற்றும் காவலாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என கேட்டுக்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட பட்டியலினப் பெண் தொழிலாளி பேசுகையில், “அதிகாரிகளின் வீடுகளில் தூய்மை பணியை செய்து வந்தேன். 23 ஆண்டுகளாக வேலை செய்து வந்த என்னை, திடீரென வெளியே அனுப்பிவிட்டனர். ஆனாலும் வாழ்வதற்கு வேறு பொருளாதார வசதி இல்லாததால், மீண்டும் அங்கே வேலை செய்யச் சென்றேன். ஆனால் என்னை செக்யூரிட்டியை வைத்து அடித்து துன்புறுத்தினர், எனக்கு உரிய நியாயம் வேண்டும்”, என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: தேர்தல் பயிற்சிக்கு சென்ற ஆசிரியைகளிடம் செயின் பறிக்க முயற்சி.. காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி! - CHAIN SNATCHING IN KARUR