சென்னை: ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் வேகத்தை 12 கி.மீ வேகத்தில் இருந்து 7 கி.மீ வேகமாக குறைத்துக் கொண்டள்ளதாகவும், புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, தற்போது, சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 180 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 210 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று மதியம் காரைக்கால் - மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு மிக அருகில் கரையை கடக்கிறது.
அப்போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக அதிகளவு மேக கூட்டங்கள் கடற்கரையை நோக்கி இழுக்கப்படுவதால், தற்போதே காற்றுடன் கூடிய அதிக மழை பெய்ய தொடங்கியுள்ளது.