சென்னை:ஃபெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகே நேற்று (நவம்பர் 30) மாலை 5 மணி அளவில் கரையை கடக்க தொடங்கி இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையை கடந்துள்ளது. இந்த புயலானது, தொடர்ந்து புதுச்சேரிக்கு அருகே நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் இந்த புயலானது, மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த நிலையில், மூன்று மணி நேரமாக நகராமல் உள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூடுதல் இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், “தற்போதைய நிலவரப்படி இந்த புயலானது புதுச்சேரியில் நிலை கொண்டுள்ள நிலையில் மெதுவாக நகர்ந்து மேற்கு திசை நோக்கி நகர உள்ளது.
கடலூருக்கு வடக்கே சுமார் 30 கி.மீ., விழுப்புரத்திலிருந்து கிழக்கே 40 கி.மீ., சென்னைக்கு தென்மேற்கே 120 கி.மீ. என நகர்ந்து அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டளமாக வழு குறையும். இவை சென்னை மற்றும் காரைக்காலில் உள்ள டாப்ளர் வானிலை ராடார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது”.