தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூலம், ஆன்லைனில் (Online job) பணம் சம்பாதிக்கலாம் என டெலிகிராமில் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அவர்கள் கூறிய தனியார் நிறுவனத்திற்கு (L&T construction sites and buildings) ரிவ்யூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அதனை நம்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த நபரும், மர்ம நபர்கள் கூறியபடி ரிவ்யூ கொடுத்துள்ளார். அதற்காக சிறிதளவு பணத்தையும் ஈட்டியுள்ளார். பின்னர், அந்த மர்ம நபர்கள் தூத்துக்குடி நபரைத் தொடர்பு கொண்டு www.intecct.net என்ற இணையதளத்தில் முதலீடு செய்வதன் மூலமாகவும் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைக் கூறியதாகக் கூறப்படுகிறது.
அதனையும் நம்பி, மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு பல்வேறு பணம் அனுப்பும் செயலிகள் மற்றும் வங்கியின் பண பரிவர்த்தனை செயலிகள் மூலமாகப் பல தவணைகளாக மொத்தம் ரூ.55 லட்சத்து 49 ஆயிரத்து 916 முதலீடு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சுதாரித்துக் கொண்ட அவர், பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்து, சைபர் கிரைமில் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையில் தனிப்படை அமைத்து பண மோசடி செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.