தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாடுகளில் சைபர் கிரைமில் அதிகம் ஈடுபடுத்தப்படுவது தென்தமிழக இளைஞர்களா? வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறுவது என்ன? - Cyber crime - CYBER CRIME

Cyber Crime: சைபர் குற்றங்களில் தென்தமிழக இளைஞர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்; வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் இளைஞர்களுக்கு சைபர் கிரைம் குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது என்று சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் கார்த்திகேயன்
வழக்கறிஞர் கார்த்திகேயன் (Image Credits - karthikeyan x page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 9:26 PM IST

சென்னை: தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படும் இளைஞர்கள் அங்கு கட்டாயப்படுத்தப்பட்டு சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி காவல் நிலையத்திலும், சென்னை பெருநகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவிலும் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் இவ்வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

இந்நிலையில், சைபர் கிரைம் குற்றங்கள் எங்கிருந்து நடத்தப்படுகிறது, இதன் தலைமையிடம் எங்கே உள்ளது? இளைஞர்கள் எப்படி சிக்குகிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் ஈடிவி பாரத் முன்வைத்தது. இதற்கு பதில் அளித்த அவர், “தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்லும் இளைஞர்களுக்கு சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட செல்கிறோம் என்பது தெரியாது.

இளைஞர்களை பொருத்தவரை வெளிநாட்டில் வேலை, ரூ.2 லட்சம் சம்பளம், தங்கும் இடம், விமான கட்டணம் அனைத்தும் இலவசம் என்று கூறுவதால், தொடர்ந்து பணிக்காக இளைஞர்கள் செல்கின்றனர். ஆனால், வெளிநாட்டிற்கு சென்ற பிறகு சைபர் கிரைமில் அவர்களை ஈடுபட வைப்பார்கள். பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சைபர் கிரைமில் வாங்கி வைத்துக்கொள்வதால், செய்வது குற்றம் என தெரிந்தாலும் அவர்களால் தாய்நாட்டிற்க்கு வர இயலாது.

சைபர் கிரைம் குறித்த பயிற்சி:சைபர் கிரைமில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன், சைபர் கிரைமில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்பட்டு ஒரு வருடம் சைபர் கிரைமில் ஈடுபட வைப்பார்கள். ஒரு வருடத்திற்கு பிறகு வேறு ஒரு குழுவிற்கு பயிற்சி அளித்து சைபர் கிரைமில் ஈடுபடுத்துவார்கள்.

கம்போடியா, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இளைஞர்கள் அதிகமாக அழைத்து சென்று, சைபர் கிரைம் நடத்தப்படுகிறது. பிறகு இளைஞர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்படுகிறார்கள். இது குறித்து இளைஞர்கள் வெளியில் கூறினாலும் சைபர் கிரைம் குழு கவலை கொள்வதில்லை. ஏனென்றால். அவர்கள் செய்த குற்றத்திற்கும் ஆதரமில்லை.

தலைமை வகிக்கும் சீனா:வெளிநாடுகளுக்கு இளைஞர்களை வேலைக்கு அனுப்பும் பல முகவர்களுக்கும், சைபர் கிரைமில் ஈடுபடுத்த ஆட்களை அனுப்புகிறோம் என்பது தெரியாது. வெளிநாடுகளுக்கு சென்ற பிறகு சைபர் கிரைம் குழு சொல்வதை கேட்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், இளைஞர்கள் குற்றச்செயல்களுக்கு தள்ளப்படுகிறார்கள்.சீனாவில் சைபர் கிரைம் குற்றச்செயல்களுக்கான தலைமை குழுக்கள் செயல்படுகின்றன. அங்கிருந்து கம்போடியா, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் சைபர் கிரைம் குழுக்கள், குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை கட்டுப்படுத்துகிறார்கள்.

அதிகளவில் தென்தமிழக இளைஞர்கள்:சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் இளைஞர்களை முழுமையாக கண்காணிப்பில் வைத்திருப்பார்கள். எத்தனை இளைஞர்கள் இதுபோன்று உள்ளனர் என்பதற்கு தரவுகள் இல்லை. வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக இதுபோன்ற சைபர் கிரைமில் ஈடுபடும் குழுவிடம் சிக்கியுள்ளனர்.

வங்கியில் இருந்து பேசுவது போல் பணம் பறிப்பது, பெண்களிடம் பேசி காதலிக்க வைத்து அவர்களின் தனிப்பட்ட புகைப்படத்தை பெற்று பெற்றோரிடம் பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சைபர் கிரைமில் ஈடுபடுகிறார்கள். வெளிநாடுகளில் நமக்கு தெரிந்தவர்கள் பணிப்புரிகிறார்கள் என்றால் அவர்கள் மூலமாக பணிக்கு செல்ல வேண்டும். நிறுவனத்தின் பெயரில் விசா எடுக்காமல் தங்கள் பெயரில் தனி விசா எடுக்க வேண்டும்” என்று கார்த்திகேயன் கூறினார்.

இதையும் படிங்க:சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடி மாற்றம்.. புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details