விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் தமிழ்நாட்டில் திமுக பொறுப்பேற்றதிலிருந்து சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தலை தடுக்க திமுக அரசு தவறிவிட்டதாகவும் கூறி அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம், "தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் முன்னேறுகிறதோ இல்லையோ, போதைப்பொருள் கடத்தலில் முன்னேறுவதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொள்ளாமல் அரை டவுசரை போட்டு கொண்டு ஓடிக் கொண்டு இருப்பதாகவும் தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகள் கிடைப்பதாக குற்றம்சாட்டினார்.
இஸ்ஸாம் சமூகத்தை சேர்ந்த, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாதிக் பாஷா உயிரிழந்த போது, அவரது உடலை அடக்கம் செய்யாமல் எரியூட்டப்பட்டு உள்ளதாகவும், அதே போல் ஜாபர் சாதிக் உயிரோடு கைது செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு போதைப் பொருட்களை தடுப்பதற்குத் தவறியுள்ளது. தவறு செய்தவர்களே திமுக கட்சியில் தான் இருக்கின்றனர். தவறு செய்தது முதலமைச்சராகவும், அமைச்சராக இருந்தாலும் ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்தவர்களை முழுமையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கஞ்சாவை கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் சைக்கிளை எடுத்து கொண்டு ஊர் சுற்றியதாக தெரிவித்தார். திமுகவை சார்ந்த முக்கியமான மாவட்ட பொறுப்பிலிருந்த ஜாபர் சாதிக் 3500 கிலோ போதைப்பொருள் வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளார்.