மதுரை:மதுரையில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவோடு 'யங் இந்தியன்ஸ்' 'சிஐஐ' உள்ளிட்ட பல்வேறு தனியார் அமைப்புகளின் பங்களிப்போடு 'மாமதுரை விழா' நடைபெற்று வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக இந்நிகழ்வை தமுக்கம் மாநாட்டு கூட்ட அரங்கில் துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், தொல்லியல் பயணம், மதுரை கலைத் திருவிழா, இரட்டை அடுக்கு பேருந்துப் பயணம், பலூன் திருவிழா, உணவுத் திருவிழா, விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையில், தமுக்கத்தில் மதுரையின் பழமையைப் பறைசாற்றும் வண்ணம் 'மதுரை கலைக்கூடம்' எனும் பெயரில் புகைப்படக் கண்காட்சி இடம் பெற்றுள்ளது.
"தமிழ் வரலாற்றில் இரண்டு நகரங்கள் மட்டுமே 2 ஆயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்டதாகும். ஒன்று பூம்புகார், மற்றொன்று மதுரை" என வரலாற்றை முன்வைக்கிறார் இக்கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக பாறை ஓவியங்கள் குறித்த ஆய்வாளருமான காந்திராஜன். மேலும், கண்காட்சியினை குறித்து அவர் கூறுகையில், "பூம்புகார் அழிந்து அதன் எச்சங்கள் மட்டுமே மிஞ்சியுள்ள நிலையில், மதுரை மட்டுமே தனிச்சிறப்பு மிக்கதாய் திகழ்கிறது.
தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில், பூம்புகாரையும், மதுரையையும் மட்டுமே தனது பாடல்களில் போற்றி மகிழ்கிறது. மதுரையைச் சுற்றியுள்ள தமிழிக் கல்வெட்டுகள் அதன் பண்டைய பெருமையையும் உயர்வையும் தெளிவாகக் காட்டுகின்றன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துப் பொறிப்புகளைக் கொண்ட மலைகளை உடையதாக உலகிலேயே மதுரை மட்டுமே திகழ்கிறது.
அதனை முன்னிட்டு, மாமதுரை நிகழ்வில் மதுரையின் பழமையை உணர்த்தும் வகையில் மதுரை கலைக்கூடம் எனும் தலைப்பில் புகைப்படக் கண்காட்சி அமைத்துள்ளோம். மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் காணப்படும் தமிழி எழுத்துக்கள் மட்டுமன்றி, இங்குள்ள பழமையான கோயில்கள், சிற்பங்கள், பிரிட்டிஷ் காலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள், கலித்தொகை வர்ணிக்கும் ஏறுதழுவுதல் என அனைத்தையும் காட்சிப்படுத்தியுள்ளோம். மதுரையின் மொத்த பழமையையும் ஒரே இடத்தில் பொதுமக்கள் அனைவரும் கண்டு களிக்க முடியும்" என்றார்.