தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சங்கரன்கோவிலில் போலீஸார் தாக்கியதால் ஓட்டுநர் இறந்ததாக புகார்: நீதி கேட்டு 4வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்! - tenkasi van driver death issue

cpm protest: சங்கரன்கோவிலில் போலீஸார் தாக்கியதில் வேன் டிரைவர் இறந்ததாக எழுந்த புகாரில், குடும்பத்திற்கு நீதி கேட்டு தென்காசி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நீதி கேட்டு சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
போலீஸார் தாக்கியதால் ஓட்டுநர் இறந்ததாக புகார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 10:38 AM IST

போலீஸார் தாக்கியதால் ஓட்டுநர் இறந்ததாக புகார்

தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (37), இவரது மனைவி மீனா. இவர் கடந்த 8 ஆம் தேதி சிவராத்திரி அன்று, அச்சம் பட்டி கிராமத்தில் உள்ள பொதுமக்களை சங்கரன்கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக வேனில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, நகரப் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஓட்டுநர் முருகன் மது அருந்திவிட்டு விபத்து ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் டவுன் போலீஸார், ஓட்டுநர் முருகனை தாக்கியதாகும் கூறப்படுகிறது.

பின்னர் வேனை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முருகன் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்து வந்த முருகனின் உறவினர்கள், போலீஸார் தாக்கியதால் முருகன் இறந்ததாக கூறி, சம்பவத்திற்கு காரணமான போலீஸார் மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உடலை பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லவிடாமல் தடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, அவரது உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து, "உயிரிழந்த முருகனின் மனைவிக்கு அரசு வேலை, இழப்பீட்டுத் தொகை மற்றும் அவர்களது 3 குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும்.

மேலும், அனுபவம் மிக்க மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். முருகன் மரணத்துக்கு காரணமான காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வடக்கு புத்தூர் கிராமத்தில் நான்காவது நாளாக உறவினர்கள், முருகனின் உடலை வாங்க மறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு நீதி கேட்டு, தென்காசி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் போலீஸார் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று (மார்ச் 11) ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் அசோக் தலைமை வகித்தார். மேலும், ஆர்ப்பாட்டத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் பால்ராஜ், துணைத் தலைவர் சி.கே.குமார், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை பொதுச் செயலாளர் சுகந்தி, மாநில குழு உறுப்பினர் கே.ஜி பாஸ்கரன், தென்காசி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:'கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவின் சொத்து' - சீமான் பேச்சுக்கு விஜய பிரபாகரன் பதிலடி

ABOUT THE AUTHOR

...view details