தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சுற்றியுள்ள குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி, கோவில்புரம், மேல்மங்கலம், காமக்காபட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான மானாவாரி நிலங்களிலும், நீர்ப்பாய்ச்சியின் நிலங்களிலும், கடந்த ஆண்டு பெய்த பருவ மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் அதிக அளவில் பருத்தியைப் பயிரிட்டு இருந்தனர்.
மேலும், கடந்த ஆண்டு ஒரு கிலோ பருத்தி விலை ரூ.100-ஐத் தாண்டி விற்பனையானதால், இந்த ஆண்டு மானாவாரி விவசாயத்தில் விவசாயிகள் அதிக அளவில் பருத்தியைப் பயிரிட்டு உள்ளனர். இந்நிலையில், பருத்தி நன்றாக வளர்ந்து பிஞ்சுகள் விட்டு காய் பருவமடையும் சூழலில், பருத்தி பயிர்களில் செவட்டை நோய் தாக்குதல் மற்றும் அஸ்வினி பூச்சிகளின் தாக்குதலால் பருத்தி பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து, விவசாயிகளுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் சூழலை உருவாகியுள்ளது.