மதுரை:திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் சொந்தமாக பங்களா கட்டி உள்ளனர்.
இந்த பங்களாவிற்கு கொடைக்கானல் நகராட்சியிடம் இருந்து உரிய அனுமதி பெறாமல், விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டிங்களை எழுப்பி உள்ளனர். இது போன்று விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டடம் கட்டுவதால், கொடைக்கானலில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அருகில் உள்ள வீடுகளும் இடிவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன.
மேலும், கனரக இயந்திரங்கள் மூலமாக மலையில் உள்ள பாறைகளை அகற்றி உள்ளனர். இது விதிமுறைகளை பின்பற்றாமல் நடைபெற்றுள்ளது. எனவே உரிய அனுமதி இல்லாமல், விதிமுறைகளை பின்பற்றாமல் மலைப் பகுதியில் கட்டடம் கட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்”, என கூறப்பட்டிருந்தது.