தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகக் காவலர் தற்கொலை: ஆன்லைன் ரம்மியால் விபரீதமா என்றும் போலீஸ் விசாரணை? - காவல் குடியிருப்பில் காவலர் தற்கொலை

constable committed suicide: காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த காவலர், ஆவடி பகுதியிலுள்ள திருமுல்லைவாயிலில் காவல் குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மியால் நடந்த விபரீதமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை
காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக காவலர் தற்கொலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 10:52 PM IST

சென்னை: மணலி காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்த விக்னேஷ், பெண் காவலர் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மனமுடைந்த விக்னேஷ் இன்று (மார்.09) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விசாரணையில் ஆன்லைன் ரம்மியில் விக்னேஷ் 30,000 ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளதாகத் தெரிய வந்ததையடுத்து, அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

விருத்தாச்சலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(27). இவர் காவலர் குடியிருப்பில் தங்கி மணலி காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் 25 வயதுடைய பெண் காவலருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்த நிலையில், குடும்பத்தினரின் சம்மதத்துடன் வரும் மே மாதம் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் காதலித்த பெண் காவலர் தங்கி இருந்த திருமுல்லைவாயில் எஸ்.எம் நகர் காவலர் குடியிருப்புக்கு விக்னேஷ் வந்துள்ளார். அப்போது விக்னேஷ்கும், அவரது காதலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண் காவலர் தன் சொந்த ஊருக்குக் கிளம்பிச் சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த விக்னேஷ், அந்த காவலர் குடியிருப்பிலேயே தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயில் போலீசார் விக்னேஷின் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், உயிரிழந்த விக்னேஷ் ஆன்லைன் ரம்மியில் 30,000 ரூபாய் இழந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே இதன் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காவலர் குடியிருப்புப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 'பிரியமான தோழி' சீரியல் நடிகை தீபா சென்னை கோர்ட்டில் மனு.. காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details