நாகர்கோவில் அருகே ரயிலைக் கவிழ்க்க சதி கன்னியாகுமரி:குஜராத் காந்திதாமில் இருந்து 'காந்திதாம் - ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ்' ரயில் நேற்று முன்தினம் (பிப்.19) அதிகாலை நெல்லைக்குப் புறப்பட்டது. இந்த ரயில் நேற்று இரவு (பிப்.20) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நெருங்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திருவனந்தபுரம் - நாகர்கோவில் ரயில் வழித்தடத்தில், பார்வதிபுரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வந்த போது, தண்டவாளத்தில் பெரிய பாறை கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை இன்ஜின் டிரைவர் பார்த்துள்ளார்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே சுதாரித்துக் கொண்டு, சாமர்த்தியமாக ரயிலை மெதுவாக இயக்கியுள்ளார். எனினும் ரயில், தண்டவாளத்தில் இருந்த பெரிய கற்கள் மீது பெரும் சட்டத்துடன் மோதியபடி சென்றது. ஆனால், மெதுவாக ரயில் இயக்கப்பட்டதால் கற்கள் மீது மோதியும், அதிர்ஷ்டவசமாக ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து விலகவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து, இந்த ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திற்கு வந்ததும், ரயிலை நிறுத்திய இன்ஜின் டிரைவர், உடனடியாக ரயில்வே போலீசுக்கும், அதிகாரிகளுக்கும் தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டு, ரயிலைக் கவிழ்க்க முயன்ற சதி பற்றி தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை நோக்கிச் சென்றது.
இதற்கிடையே உஷாரான நாகர்கோவில் ரயில்வே போலீசார் மற்றும் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது தண்டவாளத்தில் மாட்டின் மண்டை ஓடு, கொம்பு மற்றும் ஆறு பெரிய பாறை கற்கள் உடைந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அதனை போலீசார் முதலில் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, அந்த தண்டவாளத்தில் பாறை கற்கள் வைத்தது யார் என்பதைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள மக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு நான்கு ஆசாமிகள் சந்தேகப்படும்படியாக சுற்றி வந்தது தெரிய வந்துள்ளது. மேலும், அவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும், சில இளைஞர்கள் அப்பகுதி வழியாக வேகமாக சென்றதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
எனவே அந்த ஆசாமிகள் ரயிலைக் கவிழ்க்க கற்களை வைத்து சதி செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அந்த மர்ம நபர்களைத் தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரயில் தண்டவாளத்தில் பெரும் பாறை கற்கள் மற்றும் இறந்த மாட்டின் தலையை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம்: நிலம் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை எப்போது?