தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“நேரு உடன் ஒப்பீடா.. இவிஎம் இயந்திரத்துக்கு எதிர்ப்பு இல்லையே..” - ப.சிதம்பரம் அளித்த பதில் என்ன? - P Chidambaram - P CHIDAMBARAM

P.Chidambaram: தேர்தலில் தார்மீக வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்கு, தார்மீக தோல்வி நரேந்திர மோடிக்கு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப. சிதம்பரம், பிரதமர் மோடி புகைப்படம்
ப. சிதம்பரம், பிரதமர் மோடி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 7:56 PM IST

Updated : Jun 7, 2024, 8:34 PM IST

சென்னை:தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு பாஜகவால் தயாரிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் பொய் பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை சத்யமூர்த்தி பவனில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தாா். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலின் போது, தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தயாரிக்கப்பட்டவை. நான் உள்பட பல தலைவர்களும் வாக்குப்பதிவு தினத்தன்று பல வாக்குச்சாவடிகளுக்குச் சென்றோம். ஆனால், எந்த வாக்குப்பதிவு மையத்தின் வெளியிலும், வாக்களித்து வெளியே வந்த வாக்காளர்களிடம் கருத்து கேட்டதாக எந்த செய்தியும் கிடையாது.

ஆனால், திடீரென்று நாங்கள் பல லட்சம் பேரிடம் கருத்துக் கணிப்பு கேட்டதாக கூறி, 350-400 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றனர். அனைத்து தொலைக்காட்சிகளிலும் 350 - 400 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என வெளியிட்டு மக்களை முட்டாளாக்கியுள்ளனர். அதையெல்லாம் மீறி பாஜகவுக்கு இந்த நாட்டு மக்கள் அடக்கத்தை கற்றுத் தந்துள்ளனர். நாளை மறுநாள் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கிறார்.

ஜவஹர்லால் நேரு உடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்கிறார். அதாவது அவருக்கு கிடைத்தது, 282, 303, 240 இந்த மூன்று எண்ணிக்கையிலான இடங்கள்தான். ஆனால், ஜவஹர்லால் நேருவுக்கு கிடைத்தது, 361, 374 மற்றும் 364. ஜவஹர்லால் நேருவோடு பிரதமர் மோடி தன்னை ஒப்பிட்டுக் கொள்வதை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த நாட்டு மக்களும் நிராகரிப்பார்கள். மூன்றாவது முறை பொறுப்பேற்கும் மோடிக்கு, குடிமகன் என்ற முறையில், அவரது அரசை வாழ்த்துகிறோம். அதே நேரத்தில், எதிர்க்கட்சி என்ற முறையில், அந்த அரசின் செயல்பாடுகளை நாங்கள் கண்டிப்பாக கண்காணிப்போம்” என்றார்.

இவிஎம் பற்றி காங்கிரஸ் இப்போது ஏன் பேசவில்லை, காங்கிரஸ் ஏன் வெற்றி பெற்றதைக் கொண்டாடுகிறது என்று பிரதமர் பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில், மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரத்தை நிராகரிப்பதாக சொல்லவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள விவிபாட்டினுள் விழும் தாளை வாக்காளரே எடுத்து அந்த பெட்டிக்குள் போடும் வசதிகளைச் செய்யலாம்.

இந்த சிறிய மாற்றத்தைச் செய்தால், இவிஎம், விவிபாட் முறையில் யாருக்கும் எந்த சந்தேகமும் எழாது. 10க்கு 3 முதல் 4 பேரிடம் மின்னணு வாக்கு குறித்து கேட்டால், அவர்கள் மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது சந்தேகம் உள்ளது என கூறுகிறார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த தேர்தலில் தார்மீக வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்குத்தான். தார்மீக தோல்வி நரேந்திர மோடிக்குத்தான். எனவே, நாங்கள் கொண்டாடுவதில், பிரதமர் மோடிக்கு என்ன வருத்தம், பொறாமை? பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போதும், கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த போதும் ஒற்றை மனிதர் ஆட்சியை நடத்தியுள்ளார். தற்போது இது கூட்டணி ஆட்சி என்பதால், இந்த ஆட்சி நீடிக்குமா என்பது காலம் பதில் சொல்லும்.

இந்திய பொருளாதரத்திற்கு ஏற்ப பங்குச்சந்தை உயர்ந்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால், இந்திய பொருளாதாரத்தை விட பங்குச்சந்தை உயர்ந்தால் பங்குச்சந்தை வீக்கம் என்றுதான் கூற வேண்டும். பிரதமர் அரசியல் சாசனத்தை வணங்கியதை வரவேற்கிறேன். அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க மக்கள் இந்தியா கூட்டணிக்கு 240 இடங்களைத் தந்துள்ளார்கள்.

இந்தியா இருக்கும் வரை இந்திய தேசிய காங்கிரஸ் இருக்கும். சுதந்திரப் போராட்டம் முதல், சுதந்திரத்தை வென்றது முதல் காங்கிரஸ்-க்கு மிகப்பெரிய பங்குள்ளது. கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் காங்கிரஸ் எப்போதும் பொறுப்புடன் செயல்படும். ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் பெற்றவர்கள் எப்படி வெற்றியாளர்களாக கருதுவார்களோ அதுபோல் தான் இந்தியா கூட்டணியின் வெற்றி. ராகுல் காந்தியின் யாத்திரை இந்தியா கூட்டணி வெற்றிக்கு முக்கிய காரணம்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:"இந்த காலத்திற்கு ஏற்ற சரியான தலைவர்" மோடியை புகழ்ந்த சந்திரபாபு நாயுடு.. டெல்லியில் நடக்கும் அடுத்தடுத்த நகர்வுகள்! - Nda Alliance Meeting Update

Last Updated : Jun 7, 2024, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details