திருச்சி: காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் மீதும், கட்சித் தலைவர்கள் மீதும், இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீதும் பாஜக விரோத போக்கை கடைப்பிடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை முடக்குவதில் குறியாக இருக்கும் பாஜக அரசு, காங்கிரஸ் கட்சியின் நிதியை முடக்கி உள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்கள் ஆட்சிக்குப் பங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், இந்தியா கூட்டணி வலுவடைந்து விடக் கூடாது என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கிற்கு இன்று வரி விதிப்பு செய்கின்றனர். 2017 முதல் 2024ஆம் ஆண்டு வரை 1,823 கோடி வரி விதிப்பு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.,க்களிடம் இருந்து 14 லட்சம் நகை, பணமாகப் பெற்றதற்கு, 45 நாட்கள் கணக்கில் காட்டப்படவில்லை, என்று காரணம் கூறுகின்றனர்.
இதற்கு 132 கோடி வரிவிதிப்பு செய்துள்ளனர். இந்தியா கூட்டணியின் வளர்ச்சி பாஜகவினருக்குக் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில், 42 கோடி ரூபாய் பாஜக கட்சிக்கு நிதி பெறப்பட்டுள்ளது.
14 லட்சத்து 132 கோடி ரூபாய் வரி விதிப்பு செய்தவர்கள், 42 கோடிக்கு 4,200 கோடி வரி விதிப்பு செய்திருக்க வேண்டும். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்ற துறைகள் ஒரு தலைப் பட்சமாக இயங்குகிறது. காங்கிரஸ் கட்சியின் பணம் முடக்கத்தை, ஒவ்வொருவரின் உரிமையைப் பறிக்கும், ஜனநாயக படுகொலையாகப் பார்க்க வேண்டும்.