சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகள் தீவிரப்படுத்த துவங்கி விட்டன. திமுக தொடர்ந்து தன்னுடைய கூட்டணி கட்சிகளை தம் வசம் வைத்திருந்தாலும், தற்போது திமுக எதிரான சில கருத்துகளை விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வைத்து வருகின்றன. முருகன் மாநாடு விவகாரம் கூட்டணி கட்சிகளில் சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற, இந்த கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தேர்தல் கூட்டணி, திமுக உடனான உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டிப் பேசினார்.
திமுக தோல்விக்கு காரணம் விசிக? அப்போது பேசிய அவர், 2016 தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்ததற்கு பூரண மதுவிலக்கு என்கிற வாக்குறுதி தான் காரணம் என உதயநிதி தவறான தகவலை பதிவு செய்துள்ளார். ஆனால், தரவுகளின்படி கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியது தான் திமுகவின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து விசிக, திமுகவுக்கு எதிரான கருத்துகளை கூறி வரும் நிலையில் திமுக - விசிக உறவு எப்படி உள்ளது, வருகிற தேர்தலில் விசிக யுக்திகள் மாறுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் ஈடிவி பாரத் முன் வைத்தது. இதற்கு பதில் அளித்த அவர், 2026 ஆம் ஆண்டு நடைப்பெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வியூகத்தில் பெரிதாக மாறுதல் இருக்காது.
இந்து அறநிலையத்துறை கல்வி நிலையங்களில், மதம் சார்ந்த பாடங்களை நடத்துவது உள்ளிட்ட திமுகவின் செயல்பாடுகளில் விசிகவிற்கு சில சர்ச்சை கருத்துகள் இருக்கலாம், ஆனால், அதற்காக அதிமுகவின் பக்கம் விசிக சென்றுவிடும் என கூறமுடியாது. அண்ணாமலைக்கும், எடப்பாடிக்கும் இடையே தான் தனிப்பட்ட மோதல் நடைபெறுகிறதே தவிர, ஒட்டு மொத்த அதிமுகவிற்கும், பாஜக தலைமைக்கும் இடையேயான மோதல் போல தெரியவில்லை.
பாமக திமுகவில் இணையாது: விசிக இருப்பதால் பாமக திமுகவில் இணையாது. இதன் காரணமாக தலித் வாக்குகள், வன்னியர் அல்லாதவர்கள் வாக்குகள் விசிகவிற்கு கிடைக்கிறது. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் விசிக 0.77% வாக்குகள் தான் வாங்கியது. அப்போது, அதிமுக கூட்டணி 40.85 % வாக்குகளும், திமுக 39.85 % கூட்டணி வாக்குகள் வாங்கியது. இதை கணக்கிட்டு விசிகவின் 0.77% வாக்குகள் திமுகவிற்கு கிடைத்திருந்தால் கடுமையான போட்டி நிலவி இருக்கும். ஆனால், திமுக ஆட்சி அமைத்திருக்கமுடியுமா என்பது உறுதியாக கூற முடியாது என்றார்.