விருதுநகர்: சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளின் விதிமீறல்களைத் தடுக்க, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் 4 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாவட்டம் முழுவதிலும் உள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளுக்குச் சென்று, விதி மீறல்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (மே 18) காலை அனுப்பன்குளம் அருகே உள்ள ராமலிங்கபுரத்தில் முருகேஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையின் அருகே, அனுமதியின்றி தகர செட் அமைத்து அங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வருவாய் ஆய்வாளர் விக்னேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் காளியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு பேன்சி ரக பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், அருகிலிருந்த கட்டிடத்திற்கும் சென்று அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது, பட்டாசு தயாரிக்கத் தேவையான குழாய்கள் மட்டும் அனுமதி இன்றி சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் விக்னேஸ்வரன் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்ததன் பெயரில், தாசில்தார் வடிவேல், தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகள் ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, 2 அறைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைக்க முயன்றுள்ளனர். அப்போது, பட்டாசுக் கடை நிர்வாகி ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரும், ஜமீன் சல்வார் பட்டியைச் சேர்ந்த ஒருவரும் கடைக்கு சீல் வைக்கக் கூடாது என தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தகராறின் போது சக்திவேலும், அவருடன் இருந்தவரும் வருவாய் ஆய்வாளர் விக்னேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் காளியப்பன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வருவாய் ஆய்வாளர் விக்னேஸ்வரன் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தற்போது, அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:கேரளாவில் காணாமல் போன காரில் கஞ்சா கடத்தல்.. பெரம்பலூர் போலீசாரிடம் சிக்கிய 3 பேரின் பின்னணி என்ன?