திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லீலாவதி (85). இந்த மூதாட்டிக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் என மொத்தம் 4 பிள்ளைகள் இருந்த நிலையில், இவரது மூத்த மகள் சாந்தி என்பவர் ஜோலார்பேட்டையில் வசித்து வந்த ஆந்திர மாநிலம், வக்காலா பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் சென்னைக்கு சென்று வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிஷோர் குமார் என்ற மகன் பிறந்த பிறகு சில ஆண்டுகளில் அவர்கள் தங்கியிருந்த ஹாஸ்டல் உரிமையாளர் விடுதியை நடத்த முடியாமல் மூடி உள்ளார். அப்போது, சாந்தி தனது தாயிடம் முறையிட்டு அவரிடம் இருந்து பணத்தைப் பெற்று அதே விடுதியை சாந்தி பெண்கள் விடுதி என்று பெயர் வைத்து சென்னை கோடம்பாக்கம், மகாலிங்கபுரத்தில் நடத்தி வந்துள்ளார்.
மேனேஜர் எண்ட்ரியால் சிதைந்த குடும்பம்: அதனைத் தொடர்ந்து, ஒரு ஹாஸ்டல் பல ஹாஸ்டலாக மாறும் பொழுது ஆட்கள் தேவை இருந்த நிலையில் நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த கிரிராஜ் என்பவரை மேனேஜராக சாந்தி வேலைக்கு சேர்த்துள்ளார். எங்கு போனாலும் இவர்கள் இருவரும் ஒன்றாக சென்று வரும் நிலையில், இருவருக்குள்ளும் திருமணத்தை மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த சாந்தியின் கணவர் பாபு, அவரது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் பாக்காலா என்ற ஊருக்கே திரும்பிச் சென்றுள்ளார். அவரது மகன் கிஷோரை விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்து வளர்த்துள்ளனர். பல வருடம் கழித்து, இதனை எல்லாம் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மேனேஜர் கிரிராஜ், சாந்தியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாக சான்று முதல் அனைத்தும் தயார் செய்து வைத்து இருந்துள்ளார்.
சொத்துக்கள் மீது குறி: கிரிராஜூக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவருக்கும் ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாந்தி இறந்த நிலையில், கிரிராஜ் தனது மகன் கிரன் குமாருடன் சேர்ந்து சாந்தி பெயரில் இருந்த அனைத்து சொத்துக்களையும் தன்வசப்படுத்தியுள்ளார்.