திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டை ரயில்வே பீடர் சாலை நம்பிக்கை நகல் என்ற பகுதியைச் சேர்ந்த மதன் (28) என்பருவருக்கும், பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி (23) என்பவருக்கும் நேற்று ரெட்டையார்பட்டி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைத்து சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
நெல்லை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடல் (Credits - ETV Bharat Tamil Nadu) இதனிடையே, பெண் வீட்டார் தனது மகளைக் காணவில்லை என பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதுமண தம்பதிகள் இருப்பதாக பெண் வீட்டாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து, பெண்ணின் தாயார் மற்றும் உறவினர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். இதில் அலுவலகத்தில் இருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள தனியார் நாளிதழ் அலுவலகத்தையும் தாக்கியுள்ளனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அலுவலகத்தைச் சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், புதுமணத் தம்பதிகளை காவல் நிலையத்துக்கு அழைத்து வர கட்சியினருக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:திருப்பத்தூர் தனியார் பள்ளி அருகே கார் செட்டில் பதுங்கிய சிறுத்தை.. வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவர்கள்!