வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் வேலூர் மாநகர் பகுதிகளில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். வேலூர் மாநகரான சத்துவாச்சாரி பகுதியில் உள்ள 27வது வார்டு ஆர்டிஓ சாலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, திடீரென சாலை ஓரம் நின்று கொண்டிருந்த ஒருவர், "நீங்கள் எதற்கு இப்போ வருகிறீர்கள்? இத்தனை நாளாக எங்கே போனீர்கள்?
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை கும்பிடு போட்டு வாறீங்களே தவிர, எந்த ஒரு நல்ல திட்டமும் செய்வதில்லை. அப்போ எதுக்கு உங்களுக்கு ஓட்டு? ஏழையின் சின்னம் உதயசூரியன் என சொல்றீங்களே, நீங்க பணக்காரராகவும், ஓட்டு போட்ட நாங்க ஏழையாகவும் இருந்து வருகிறோம்.
கட்சிக்காரர்கள் நன்றாக உழைக்கிறார்கள். அம்மா ஐயா என கால்களில் விழுகிறார்கள். தோசை, இட்லி, வடை, பூரி என எல்லாம் சுடுகிறார்கள். எங்கள் வாழ்வாதாரமே வீணாக போய்விட்டது. வேட்பாளர் கதிர் ஆனந்த் சொல்றாரு, ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதால் தான் பெண்கள் பாண்ட்ஸ் பவுடர், ஃபேரன் லவ்லி போட்டு பளபளன்னு இருக்கீங்கன்னு. அந்த ஆயிரம் ரூபாய் பெரிய விஷயம் அல்ல. வாழ்வாதாரத்தை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும், அதுதான் பெரிய விஷயம்.