கோயம்புத்தூர்:கேரள மாநிலம் கொச்சி பகுதியில் இருந்து கோவைக்கு எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த பாரத் பெட்ரோலிய நிறுவன டேங்கர் லாரி உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி திரும்பியபோது, லாரியிலிருந்து டேங்கர் மட்டும் தனியாக துண்டிக்கப்பட்டு சாலையில் கவிழ்ந்தது.
இதனால், டேங்கரில் சேதம் ஏற்பட்டு கேஸ் வெளியேறிய நிலையில், சுமார் 7 மணி நேரமாக மீட்பு பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது மீட்புப் பணிகள் நிறைவு பெற்று பழுதடைந்த கேஸ் டேங்கர் கணபதி மாநகர் பகுதியில் உள்ள கேஸ் நிரப்பும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கழன்று விழுந்த கேஸ்டாங்கர் லாரி (ETV Bharat Tamil Nadu) சம்பவ இடத்தில் நடந்தது என்ன?
கேஸ் லாரி விபத்துக்குள்ளான நிலையில் உடனடியாக லாரி ஓட்டுநர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், கேஸ் டேங்கரில் இருந்து வெளியேறும் கேஸ் காற்றில் கலப்பத்தை தடுக்க தண்ணீரை பீச்சி அடித்தனர்.
பின் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மீட்புப் பணிகள் துரிதபடுத்தப்பட்டது.
மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர் (ETV Bharat Tamil Nadu) மேலும் விபத்து நடந்த இடத்திற்கு 500 மீட்டர் சுற்றளவில் அமைத்திருக்கும் சுமார் 15 பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டார். இதனையடுத்து டேங்கரில் இருந்து கேஸ் கசிவு நிறுத்தப்பட்டு, விபத்துக்குள்ளான கேஸ்டாங்கர் அங்கிருந்து அகற்றப்படுவதற்காக லாரியில் ஏற்ற முயற்சி செய்த போது மீண்டும் கேஸ் கசிவு ஏற்பட்டது.
சம்பவ இடத்தை பார்வையிட்ட ஆட்சியர்:
இந்நிலையில், கேஸ் லாரி விபத்து ஏற்பட்ட பகுதியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 18 டன் எடை கொண்ட கேஸ் கண்டெய்னர் சாலையில் கவிழ்ந்தது.
முதற்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்டெய்னிலிருந்து வெளியேறும் கேஸ் கசிவை அடைப்பதற்கு எம் சீல் பயன்படுத்தப்பட்டது. திருச்சி மற்றும் சேலத்தில் இது போன்ற கேஸ் கண்டெய்னர் விபத்து மீட்பு வாகனங்கள் உள்ளது. எனவே, திருச்சியிலிருந்து மீட்பு வாகனம் வந்து கொண்டிருக்கிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேட்டி (ETV Bharat Tamil Nadu) இதையடுத்து, விபத்துக்குள்ளான கேஸ் லாரியில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்து இருகூர் பகுதியில் உள்ள கேஸ் நிறுவன வளாகத்திற்கு கொண்டு செல்லப்படும். விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில், மீட்பு பணிகள் முடிவடையும். மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் பாரத் பெட்ரோல் கேஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் மாவட்ட தொழில் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்," என்றார்.
மீட்பு பணிக்காக திருவள்ளுவர் சிலை அகற்றம் (ETV Bharat Tamil Nadu) சாலையில் இருந்து அகற்றப்பட்ட டாங்கர்:
இந்நிலையில், எரிவாயுவைக் கண்காணிக்கும் கருவி (GMS- Gas Monitoring System) கருவி மூலம் சோதனையிட்டதில் கேஸ் டேங்க் பாதுகாப்பாக இருப்பதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, டேங்கரை மற்றொரு லாரியில் இணைத்து கொண்டு செல்ல முயற்சிக்கும் பொழுது மீண்டும் கேஸ் வெளியேறியதால் மீண்டும் டேங்கரை அப்புறப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது.
முடிவாக, இணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, சாலையில் இருந்து டேங்கர் கிரேன் உதவியுடன் அதில் இணைக்கப்பட்டது. தொடர்ந்து கேஸ் டேங்கர் இணைக்கப்பட்ட வாகனம், கணபதி மாநகர் பகுதியில் உள்ள கேஸ் நிரப்பும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.