கோயம்புத்தூர்:மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழும நிறுவனருமான ராமோஜி ராவ் (87) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல், ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கோவை பத்திரிகையாளர் மன்றம் ராமோஜி ராவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், “ஈநாடு ஊடக குழுமங்களின் தலைவரும், திரைப்பட தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவருமான ராமோஜி ராவ் இன்று காலமாகிவிட்டார்.
அவரது மறைவிற்கு கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த செடிகுரி ராமோஜி ராவ், நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட ஈடிவி ஊடக குழுமங்களின் தலைவராக இருந்து வந்திருக்கிறார். நாட்டிலேயே மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நகரமான ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி நிறுவனத்தை நடத்தி வந்ததோடு, ஈநாடு செய்தித்தாள் மற்றும் ஈடிவி செய்தி நிறுவனங்களின் தலைவராக அவர் பதவி வகித்து வந்துள்ளார்.