தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர், எம்.எல்.ஏவிற்கு பதிலாக, சாதாரண தொண்டனை நிறுத்திக் காண்பியுங்கள் - அண்ணாமலைக்கு அதிமுக வேட்பாளர் சவால்.. - Singai Ramachandran about bjp - SINGAI RAMACHANDRAN ABOUT BJP

ADMK candidate criticized BJP: கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியிலிருந்த போது பாஜக கோவைக்குச் செய்த திட்டங்கள் என்ன? என அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ஈடிவி பாரத் பிரத்தியோக பேட்டி மூலம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக வேட்பாளர் பிரத்தியேக பேட்டி
ஆளுநர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதில் என்னை போன்ற சாதாரண தொண்டனை நிறுத்திக் காண்பியுங்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 10:54 PM IST

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் ஆளுநரையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் நிறுத்துகின்றனர், எங்கள் கட்சி போல ஒன்றிய செயலாளர், நகரச் செயலாளர், என்னைப் போன்ற சாதாரண தொண்டன் போன்ற ஆட்களை நிறுத்திக் காண்பியுங்கள் என அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசியுள்ளார்.

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர். இதனால் கோவை பாராளுமன்ற தொகுதி, நட்சத்திர தொகுதியாக உள்ளது.

கடந்த காலங்களில் அதிமுக சட்டமன்றத் தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் மேற்கு மண்டலத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என கருதப்படுகிறது. இதனால் கோவை தொகுதி உற்றுக் கவனிக்கப்படுகிறது. இதில் யார் வெற்றி பெறுவார், யார் இரண்டாம் இடத்தை பிடிப்பார் என்பதை அறிந்து கொள்ள மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அறிமுக கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தைத் துவங்கியுள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன், ஈ டிவி பாரத்திற்குப் பிரத்தியேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர், “கரூர் காரர் கரூரில் தான் நிற்க வேண்டும், கோவை பற்றி அவருக்குத் தெரியாது. தேர்தலில் தனக்கு விருப்பமில்லை, தமிழகம் தான் எனக்கு முக்கியம் என்பவர், எதற்காகத் தேர்தலில் நிற்கிறார். நான் கோவையில் பிறந்து வளர்ந்ததால் தான், எனக்குக் கோவையைப் பற்றி தெரியும், கோவைக்கு என்னென்ன திட்டங்கள் தேவைப்படும் என்பதை நன்கு அறிந்தவன் நான்.

மாநில தலைவராக இருப்பதால் கோவையைக் கவனிக்க முடியாது, நான் கோவையில் படித்தவன் என அவர் சொல்லலாம், ஆனால் அது உண்மை ஆகாது. திடீரென வந்து மோடி வித்தை காட்டுவார்கள். கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியிலிருந்த போது கோவைக்குச் செய்த திட்டங்கள் என்ன? அதிமுக ஆட்சியில் தான் சாலைகளும், பாலங்களும் கட்டப்பட்டுள்ளது. அண்ணாமலை அதிமுகவினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் பேசியவர். அதிமுக கோட்டையில் வந்து எப்படி அவர் ஜெயிக்க முடியும்.

பாஜக வளர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “வளர்ந்த கட்சி தான் ஆளுநராக இருந்தவரை ராஜினாமா செய்ய வைத்தும், சட்டமன்ற உறுப்பினர்களை வைத்தும் போட்டியிடுகின்றனரா? எங்கள் கட்சி போல ஒன்றிய செயலாளர், நகரச் செயலாளர், என்னைப் போன்ற சாதாரண தொண்டன் போன்ற ஆட்களை நிறுத்திக் காண்பியுங்கள்.. பின் கட்சி வளர்ந்து விட்டது என சொல்கிறோம். தேர்தல் முடிவுகள் வரும்போது உண்மை தெரியும்”, என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "திமுக என்ன பொட்டு பூச்சியா நசுக்கிவிட.." - உணர்ச்சி பொங்க பேசிய துரைமுருகன்! - Duraimurugan Emotional Speech

ABOUT THE AUTHOR

...view details