கோவை:18வது மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதை கொண்டாடடும் வகையில், முப்பெரும் விழா நடத்த திமுகவினர் முடிவு செய்தனர்.
அதன்படி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மக்களவைத் தேர்தல் உட்பட தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஜூன்.15) மாலை 5 மணிக்கு தொடங்கியது.
இந்நிகழ்வில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் திமுக கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். இது தவிர, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், திமுகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்க கோவை வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரை அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் திரண்டு வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக வேன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் புறப்பட்டு, அருகிலுள்ள தனியார் தங்கும் விடுதிக்குச் சென்று ஓய்வு எடுத்தார்.
தொடர்ந்து மாலை நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர், "கோவைக்கு கடந்த முறை வந்ததை நினைத்து பார்க்கிறேன். தேர்தல் பரப்புரைக்காக வந்த போது எவ்வளவு சிறப்பாக கூட்டம் நடைபெற்றதோ அதைவிட சிறப்பான வெற்றி கூட்டமாக இருக்கின்றது.
8 முறை தமிழ்நாட்டுக்கு வந்து பிரதமர் மோடி கட்டமைக்க முயன்ற பிம்பத்தை ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் மூலம் முறியடித்து விட்டார். ராகுல் காந்தி கொடுத்த ஒரே ஒரு இனிப்பு, எதிர்க்கட்சிகளின் கணிப்பை பொய்யாக்கியது. நாற்பதும் நமதே என்பதை நடக்க விடுவார்களா என பலரும் பேசினார்கள். நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் தேர்தல் முடிவுகளை பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ரத்தத்தை வியர்வையாக சிந்தி இந்தியா கூட்டணி வெற்றிக்காக பணி செய்த தோழர்கள் இருக்கும் திசையை நோக்கி வணங்குகின்றேன். இது மேடையில் இருக்கும் அனைவருக்குமான பாராட்டு விழா.
பாராட்டுகளை மாலைகளாக கோர்த்து தொண்டர்களான, தோழர்களான உங்களுக்கு காணிக்கையாக்குகின்றேன். 2004ல் திமுக கூட்டணி வெற்றிக்கு பின்பு ஜெயலலிதா அம்மையார் மக்கள் விரோத நடவடிக்கையில் இருந்து பின் வாங்கினார். இப்போதும் பாஜகவின் 400 இடங்களை கைபற்றுவோம் என்பதை உடைத்து இருக்கின்றோம்.
பாஜகவால் தனித்து அரசியல் செய்ய முடியாது. சட்ட புத்தகத்திற்கு முன்பு தலை குனிந்து இருக்க வைத்திருக்கின்றோம். இது 41வது வெற்றி திராவிட மாடல் அரசு மேல் மக்களுக்கு இருக்கும் திருப்தியில் கிடைத்த வெற்றி இது. கொள்கை உறவுடன் தொடரும் கூட்டணி தான் வெற்றிக்கு காரணம்.