சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆக.13) நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் கூகுள் நிறுவன செயல் அதிகாரி உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
அத்துடன், அங்குள்ள முக்கிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்கும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆக உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு 6.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் 27 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், தமிழக முதலமைச்சர் ஸ்பெயின் சென்று முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருந்தன. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திற்கு கூடுதல் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வருகிற 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.