சென்னை:மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை பத்மஸ்ரீ, ஸ்த்ரிசக்தி புரஸ்கார் விருதுகளைப் பெற்றவர். சின்னப்பிள்ளை குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தில் மகளிர் தினத்தையொட்டி சிறப்பு செய்தி தொகுப்பு வெளியாகி இருந்தது. அதில் சின்னப்பிள்ளை ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், பிரதமரின் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தில் வீடு கட்டுத் தருவதாக பட்டா கொடுக்கப்பட்ட பின்னரும் கூட தனக்கு அதிகாரிகள் வீடு கட்டித் தரவில்லை என வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் செய்தி எதிரொலியாக சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிடம் கடந்த 2000ஆம் ஆண்டில் “ஸ்த்ரிசக்தி” புரஸ்கார் விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை. அவர் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது, ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.
இந்த செய்தியினை கேள்விப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு புதியதாக வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தினார். இதன்படி, பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எப்படி இருக்கிறார் சின்னப்பிள்ளை? சாதனை தமிழச்சியின் இன்றைய நிலை என்ன?