தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹங்கேரியில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு செஸ் வீரர்கள்; ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்திய முதல்வர்! - CM Stalin congratulates Chess teams - CM STALIN CONGRATULATES CHESS TEAMS

45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 3 வீரர், வீராங்கனைகள் மற்றும் அணி தலைவர் ஆகியோருக்கு ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.90 லட்சத்திற்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

செஸ் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்
செஸ் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2024, 10:54 PM IST

சென்னை:ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி மற்றும் அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ. 90 லட்சம் காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், “விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

44-வது செஸ் ஒலிம்பியாட்:தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் சதுரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மற்ற மாநிலங்களுக்கு முன்னேடியாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில், மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மிகச் சிறப்புடன் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 185-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் அதிகமான சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

முதல்வர் ஸ்டாலினுடன் பிரக்ஞானந்தா (Video Credits - ETV Bharat Tamilnadu)

இதையும் படிங்க:"கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி" - செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற டி.குகேஷ்!

மேலும், சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், சர்வதேச அளவில் நடைபெறும் சதுரங்க போட்டிகளில் வெற்றி பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையினை தமிழ்நாடு அரசு வழங்கி சிறப்பித்து வருகிறது.

அந்த வகையில், ஹங்கேரி நாட்டில் செப்டம்பர் 10 முதல் 23 வரை நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற இரண்டு பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைசேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத்தொகையாகவும், அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணன் அவர்களுக்கு ரூ.15 லட்சம் காசோலை என மொத்தம் ரூ.90 லட்சத்திற்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

மேலும், வருகிற குளோபல் செஸ் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details