டெல்லி: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இன்று (மார்ச் 31) டெல்லியில் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆற்றிய உரையில், "எனது இனிய நண்பரும், டெல்லி மாநிலத்தின் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எனது கடுமையான கண்டனத்தையும் திமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனக்கு எதிராக 'இந்தியா' என்ற வலிமையான கூட்டணியை எதிர்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து அமைத்தது முதல் நிலைகொள்ளாமல் தவறுகளுக்கு மேல் தவறுகளைச் செய்து வருகிறது பாஜக தலைமை. 'இந்தியா' என்ற பெயரே அவர்களுக்கு கசப்பானதாக மாறியது. இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவரையும் ஏதோ இந்த நாட்டின் எதிரிகளைப் போல நடத்தத் தொடங்கியது பாஜக தலைமை. பாஜக அல்லாத மாநிலங்களை ஆளும் அரசுகளை மிக மோசமாக நடத்தினார்கள். ஆட்சிகளைக் கவிழ்ப்பது, கூட்டணிகளை உடைப்பது, எம்.எல்.ஏக்களை இழுப்பது என அனைத்து இழிவான செயல்களையும் செய்தார்கள்.
அதன்பிறகு, தனது ஏவல் படைகளான சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி மிரட்டுகிறார்கள். இதில் மிரண்டு பாஜகவில் ஐக்கியம் ஆகிறவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்குகளே திரும்பப் பெறப்படும். ஆனால், பாஜகவின் ஆணவங்களுக்கு அடங்காதவர்களாக இருந்தால், அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இது இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டதைப் போல இருக்கிறது.
அருமை நண்பரும், ஜார்கண்ட் மாநில முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் முதலில் கைது செய்யப்பட்டார். இப்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 'இந்தியா' கூட்டணியின் முக்கியத் தலைவர்கள். இந்தியாவின் முக்கியமான தலைவர்கள். இவர்களைக் கைது செய்வதன் மூலமாக 'இந்தியா' கூட்டணியை குலைத்துவிட முடியாது.
இது போன்ற கைதுகள், அரட்டல் மிரட்டல்கள் அனைத்தும் 'இந்தியா' கூட்டணியை வலிமையாக ஆக்கியதே தவிர, பலவீனப்படுத்தவில்லை. அரைக்க அரைக்க சந்தனம் மணப்பதைப் போல, தாக்குதல் அதிகமாக அதிகமாக கூட்டணியும், கூட்டணித் தலைவர்களும் வலிமை அடைகிறார்கள். இதைத்தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பார்க்கிறோம்.
பாஜக சில மாதங்களுக்கு முன்பு வரை வெற்றி பெற்றுவிடுவோம் என்று கருதியது. ஆனால், நாளுக்கு நாள் தோல்வியை நோக்கி வேகமாக பயணித்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம், ராமர் கோயில் என்று அடுக்கடுக்காத தனது அஜெண்டாவை பாஜக அவிழ்த்துவிடக் காரணம், இதில் ஏதாவது ஒன்றாவது தன்னைக் காப்பாற்றாதா என்ற ஆசை தான். இவை எதுவும் பாஜகவுக்கு கைகொடுக்கவில்லை. அதனால் தான் இந்தியா கூட்டணித் தலைவர்களை குறி வைத்தார்கள். அதாவது, தோல்வி பயத்தில் எதைச் செய்வது, எதைச் செய்யக் கூடாது என்பதே தெரியாமல் மூர்க்கத்தனமான சர்வாதிகார நடவடிக்கைகளைச் செய்து வருகிறார்கள். டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் கைது செய்திருப்பது அத்தகைய நடவடிக்கை தான்.
அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் சுற்றுப்பயணம் செய்து பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் அவர் கருத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை நினைத்து, அவரது பிரச்சாரத்தை தடுக்கும் முயற்சியாகவே அவரைக் கைது செய்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை ஏற்படுத்தி இருக்க வேண்டிய வரவேற்பை விட அவரைக் கைது செய்தன் மூலமாக கிடைத்த அரசியல் விழிப்புணர்வு என்பது மிகமிக அதிகம்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் வருகையை வரவேற்ற படித்த - நடுத்தர - உயர் வகுப்பு இளைஞர்கள் மத்தியில் இந்தக் கைது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'அரவிந்த் கெஜ்ரிவாலை பழிவாங்கும் நோக்கத்தோடு மோடி கைது செய்துள்ளார்' என்ற எண்ணத்தை இந்த தரப்புக்கு ஏற்படுத்தி உள்ளது. '400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறப் போகிறவர், எதற்காக இப்படி நடந்து கொள்ள வேண்டும்' என்று நடுநிலையாளர்கள் கேட்கிறார்கள். இதுவரை மோடி ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கூட, கெஜ்ரிவால் கைதுக்குப் பிறகு மோடியை விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதே உண்மை.