கரூர்:கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பொய்யாமணி அம்பேத்கர் நகரில் மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று வந்துள்ளது. இதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளனர்.
குளித்தலை குவிக்கப்பட்டுள்ள போலீசார் (Credits - ETV Bharat Tamil Nadu) இதனை அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், "பேனர் கிழித்தவர்கள் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்" என ஒரு பிரிவினர் சார்பில் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனை ஏற்க மறுத்த மாற்று சமூகத்தினர், மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறிய பிரிவினர்களின் குடியிருப்புகளில் புகுந்து கட்டையால் தாக்கியதாகவும், இதனால் இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களிடையே மோதல் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் சிறுவன் உட்பட 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்தவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் ஜோதிபாசு, குளித்தலை ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், கரூர் மாநகராட்சி மன்ற உறுப்பினர் தண்டபாணி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அக்னி இல.அகரமுத்து ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், "தலித் மக்கள் மீது வன்கொடுமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தாக்குதல் சம்பவம் நடைபெற்ற போது காவல்துறை அந்த இடத்தில் கைகட்டி வேடிக்கை பார்த்தது மிகவும் கேவலமான செயல். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். வன்முறை செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் இல்லாவிட்டால், விசிக சார்பில் போராட்டத்தை முன்னெடுப்போம்” என தெரிவித்தார். இந்நிலையில், மீண்டும் அப்பகுதியில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால், குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் குளித்தலை காவல் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்து எரிப்பு.. போலீசார் விசாரணை!