சென்னை: சென்னை தாம்பரம் பகுதியில் பெருங்களத்தூர் - பல்லாவரம் செல்லும் ஜி.எஸ்.டி சாலை உள்ளது. இந்த சாலையில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி, கடந்த சில நாட்களாக சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருக்கும் கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து, தாம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சாலைகளிலும் தொடர் போக்குவரத்து நெரிசல் இருந்ததால், அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு நிலத்தில் இயங்கிவரும் கடைகளையும் அகற்றும் ஆய்வுப் பணியில் இன்று அதிகாரிகள் இறங்கினர். இந்த ஆய்வில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் காவல் துணை ஆணையாளர் பவன் குமார் ரெட்டி, உதவி ஆணையாளர் நெல்சன், காவல் ஆய்வாளர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தாம்பரம் பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஆய்வு நிறைப்பெற்று சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அங்கிருந்து கிளம்பியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆய்வின் அடுத்தபடியாக, தாம்பரம்- முடிச்சூர் செல்லும் சாலையில் இருக்கும் அதிகப்படியான பள்ளத்தை அகற்றுவது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வசந்த் மற்றும் சென்னை வடக்கு 4வது மண்டல குழுத் தலைவர்கள் காமராஜ் மற்றும் திமுகவினரிடம் கலந்துரையாடல் நடத்தியதாக தெரிகிறது.