சென்னை :சிஐடியு பொதுச்செயலளார் ஆறுமுக நயினார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளன. சிறப்பு இயக்கத்திற்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முடிவு செய்துள்ளது.
அரசின் இந்த முடிவு தவறானது. இது மறைமுகமான தனியார்மய நடவடிக்கை. எனவே, இதை கைவிட வேண்டுமென சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றன. இது சம்பந்தமாக நேற்று( அக் 21) செய்தியாளர் சந்திப்பின்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அரசு மக்கள் நலனுக்காக செயல்படுவதாகவும், மக்கள் நலனில் சிஐடியுவிற்கு அக்கறை இல்லை எனவும் சிஐடியு மீது அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் உள்ள மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் பொது போக்குவரத்து வசதி மிக சிறப்பான முறையில் போக்குவரத்துக் கழகங்களால் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைவு. மாணவர்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள் என சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு கட்டணம் இல்லாப் பேருந்து சேவையை போக்குவரத்துக் கழகங்கள் வழங்கி வருகின்றன. இழப்பு ஏற்படும் என தெரிந்தே 10,000க்கும் மேற்பட்ட கிராமப்புற மலை வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களுக்கும், மலைப்பகுதிகளுக்கும் தமிழ்நாட்டில் தான் முழுமையாக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சமூக பொருளாதார வாழ்வில் மிகப்பெரும் பங்களிப்பை செய்து வரும் போக்குவரத்துக் கழகங்களை மேலும் வலுப்படுத்த வேண்டுமென சிஐடியு கோருவது தமிழகத்தின் மக்கள் நலனை முன்னிட்டு தான் என்பதை அமைச்சருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
மக்களின் நலனை முன்னிட்டு தீபாவளி பண்டிகை சிறப்பு இயக்கத்திற்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்டுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அது உண்மையல்ல. கடந்த 3 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்துக் கொள்கை விளக்க குறிப்பில் மொத்த கொள்முதல் ஒப்பந்த அடிப்படையில் (GCC ) தனியார் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில்தான் தற்போது ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது என அரசு கொள்கை அடிப்படையில் முடிவு செய்துவிட்டு மக்கள் நலனுக்காக இப்போதுதான் இயக்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அமைச்சர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
போக்குவரத்துக் கழகங்கள் 50 ஆண்டுகாலமாக விழாக்காலங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகின்றன. போக்குவரத்து ஊழியர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பல்வேறு பண்டிகை காலங்களில் பொதுமக்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும், கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பகுதியான போக்குவரத்து ஊழியர்கள் பண்டிகை காலங்களில் குடும்பத்தோடு இருக்க முடிவதில்லை. இந்த பணியை மகிழ்ச்சியோடு தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். இப்போதும் போக்குவரத்துக் கழகங்களால் மிகச்சிறப்பான முறையில் சிறப்பு இயக்கத்தை நடத்த முடியும். 50 ஆண்டுகளாக மிகச்சிறப்பான முறையில் இந்தப்பணியை செய்துவந்த போக்குவரத்துக் கழகங்களால் இப்போது ஏன் செய்ய முடியவில்லை என்பதை அமைச்சர் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒரு கிலோ மீட்டரை இயக்க ஆகும் செலவு சுமார் 60 ரூபாயாகும். தற்போது வசூலிக்கப்படும் கட்டணம் அடிப்படையில் முழுமையாக பயணிகள் ஏறினாலும், கிலோ மீட்டருக்கு ரூ. 30 தான் வரவு வரும்.