செங்கல்பட்டு:கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் ரவி கிரண் (37). இவர் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரராக பணியாற்றி வருகிறார். மேலும், கடந்த ஓராண்டாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஒவ்வொரு நபர்களுக்கும் தனி துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இவருக்கென தனி துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு பணியை முடித்துவிட்டு ரவி கிரண் உட்பட மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கியை ஒப்படைப்பதற்காக சிஐஎஸ்எஃப் பேருந்தில் சென்று உள்ளனர்.
அப்போது ரவி கிரண் துப்பாக்கியை, உடலுடன் அணைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. சிஐஎஸ்எஃப் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது, வேகத்தடை மீது ஏறி இறங்கியதால் துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்ததில், ரவி கிரண் கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சதுரங்கப்பட்டினம் போலீசார், உயிரிழந்த ரவி கிரணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கல்பாக்கம் அணுமின் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, எதிர்பாராத விதமாக நடந்ததா அல்லது தற்கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பொறியியல் படிப்பில் சேர்வதற்கு அதிகரிக்கும் ஆர்வம்.. 13 நாட்களில் 1.69 லட்சம் பேர் பதிவு! - Engineering Admission