சென்னை: ஹரியானா மாநிலம், சண்டிகரைச் சேர்ந்தவர் ரோதாஸ் குமார்(52). மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரரான இவர், நெய்வேலியில் உள்ள என்எல்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இவருக்கு திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், இவர் முறைப்படி விடுமுறை எடுத்துக்கொண்டு, தனது சொந்த ஊரான ஹரியானாவிற்குச் சிகிச்சைக்குச் செல்ல முடிவு செய்தார்.
அதன்படி, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி வழியாக ஹரியானா செல்வதற்காகச் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் நான்கில் 'போர்டிங் பாஸ்' வாங்கிவிட்டு பாதுகாப்பு சோதனை பகுதிக்குள் செல்ல முயன்ற போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
உடனடியாக சென்னை விமான நிலையத்தில் பணியில் இருந்த, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் சக பயணிகள், ரோதாஸ் குமாரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு ரோதாஸ் குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.