சென்னை:நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரம் கோரிக்கை குறித்து முதல்வர் சாதகமான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டதாக பகுதி நேர ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் அதனை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
அண்மையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிமுக, மதிமுக, பாமக, தவாக, கொமதேக ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். காங்கிரஸ், எஸ்டிபிஐ, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பாமக, அமமுக, தமாகா ஆகிய கட்சிகள் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்த முறையாவது பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் எனவும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தின.
எனவே முதல்வரின் பதில் உரையில் இனிப்பான அறிவிப்பை வெளியிடுவார் என பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றம் ஆகிவிட்டது. 13 ஆண்டுகளாக பணிநிரந்தரம் செய்யப்படாத நிலையில், வாழ்வாதாரம் மிகவும் பாதித்த நிலையில் எங்களை நம்பி உள்ள 12 ஆயிரம் குடும்பங்களும் பரிதவித்து நிற்கிறோம். தொகுப்பூதியம் ஒழிக்கப்பட்டு, காலமுறை சம்பளம் வழங்கப்பட்டால் மட்டுமே, எஞ்சிய காலத்தை நல்லபடியாக வாழ முடியும்,"என கூறியுள்ளார்.