சென்னை:சென்னை தி.நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசும் போது, நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் பதிவாகும் வாக்கு விகிதம் அதிக அளவில் வேறுபடுவதாகவும், அவற்றைக் களைய தொடர் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தி வருவதாகவும், இந்த முறை வாக்குப்பதிவு அதிகரிக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பிறப்பிடத்திலிருந்து பணி நிமித்தமாகவும், தொழில் நிமித்தமாகவும் வேறு இடத்துக்குச் சென்றவர்கள் குறித்து கணக்கெடுத்து, இதுவரை 40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும், பறக்கும் படைகள் மூலம் பிடிபடும் தொகை உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தால், அவை உரிய நடைமுறைகளோடு கைப்பற்றப்பட்டு கருவூலத்துக்கும், கூடுதல் தொகை பிடிபட்டால், அவை வருமான வரித்துறைக்கும் அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட மூன்று கோடி ரூபாய் பிடிபட்டிருப்பதாகவும்ம் அவை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், வாக்குப்பதிவு நாளன்று, ஊதியத்துடன் கூடிய விடுப்பு தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும் என்ற விதிமுறை தொழிலாளர் நலத்துறை ஆணையம் மூலம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அவை அனைத்து நிறுவனங்களும் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.