அரியலூர்:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
சிதம்பரம் நாடாளுமன்றத்தில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 643 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 66 ஆயிரத்து 118 பெண் வாக்காளர்களும், 86 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 19 ஆயிரத்து 847 வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 1,709 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் 288 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு, அவ்வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 5 வாக்குச்சாவடிகள் அடையாளப்படுத்தப்பட்டு, வெப் கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் கொண்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டது. காலை 7 மணி முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
இதனை அடுத்து, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் 74.87 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு, கட்சி முகவர்களின் முன்னிலையில், வாக்குப்பெட்டிகள் இன்று தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
கல்லூரியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில், பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறைகள், பொதுத் தேர்தல் பார்வையாளர் போர் சிங் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் அனைத்துக் கட்சி வேட்பாளர்கள், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், அதிமுக சார்பில் பாஸ்கர் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
அந்த அறைகளில் 24 மணி நேர வெப் கேமரா கண்காணிப்பும், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை இக்கல்லூரி முழுவதும் வெப் கேமரா கண்காணிப்பு, துணை ராணுவத்தினர் பாதுகாப்பு, உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பு என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளைக் கண்காணிக்க, வேட்பாளர்களின் முகவர்களுக்கு, கல்லூரியில் தனி இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்போர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஈரோடு மக்களவைத் தேர்தல்: 99 வயதிலும் தள்ளாடியபடி வந்து வாக்களித்த மூதாட்டி! - Lok Sabha Election 2024