சென்னை:குவைத் நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் மங்காஃப் பகுதியில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் 5 பேர் தமிழர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூடுதலாக இரண்டு பேர் என மொத்தம் 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரவும், மேலும் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், குவைத் தீ விபத்து தொடர்பாக அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். அயலக தமிழர் நலத்துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இதனிடையே, குவைத் தீ விபத்தில் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன், சின்னத்துரை, வீராசாமி மாரியப்பன், செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரீப், தஞ்சையைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூடுதலாக இரண்டு பேர் இறந்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.