சென்னை:சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு காலை 10.40 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் வந்துவிட்டு, அதே விமானம் மீண்டும் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு பகல் 12 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
அந்த விமானம் இன்று சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு தாமதமாக காலை 11.30 மணிக்கு வந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் தாமதமாக பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த விமானத்தில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு 162 பயணிகள் காத்திருந்தனர். அவர்கள் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். அவர்களிடம் விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க :மோசமான வானிலை... சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து..!
இந்நிலையில் சென்னை - சிங்கப்பூர் ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னையில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக விமானத்தின் இயந்திரங்களை விமானி சரிபார்த்தார். அப்போது விமானத்தில் உள்ள வால்வு ஒன்று பழுதடைந்து இருந்ததைக் கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானத்தை இயக்குவது ஆபத்து என்று கருதி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த வால்வை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் விமானம் தாமதமாக இன்று மாலை சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :சென்னையில் மோசமான வானிலை: விமான சேவைகள் பாதிப்பு!