தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“வங்கி ஆவணங்களுக்கும் அமலாக்கத்துறை ஆவணங்களுக்கும் முரண்பாடு உள்ளது” - செந்தில் பாலாஜி தரப்பு! - Senthil Balaji cases

Senthil Balaji Case: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய வழக்கில் ஏப்ரல் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 4:48 PM IST

Updated : Apr 25, 2024, 5:17 PM IST

வங்கி ஆவணங்களுக்கும் அமலாக்கத்துறை ஆவணங்களுக்கும் முரண்பாடு உள்ளது
வங்கி ஆவணங்களுக்கும் அமலாக்கத்துறை ஆவணங்களுக்கும் முரண்பாடு உள்ளது

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில், வழக்கு தொடர்பான வங்கி ஆவணங்களின் அடிப்படையில் வாதங்களை முன்வைக்க வேண்டியுள்ளதால், தன்னை விடுவிக்கக் கோரிய மனு மீது வாதிட அனுமதிக்கக் கோரி, செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக வங்கியில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களை வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக செந்தில் பாலாஜியை ஏப்ரல் 22ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்தும்படி சிறைத்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி, செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவருக்கு வங்கி தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டது. பின்னர், விடுவிக்கக் கோரிய மனு மீது ஏப்ரல் 25ஆம் தேதி முதல் வாதங்களைத் துவங்க செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், “வங்கி ஆவணங்களும், அமலாக்கத்துறை ஆவணங்களுக்கும் முரண்பாடு உள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆவணங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆவணங்கள் திருத்தப்படவில்லை. அனைத்து ஆவணங்களும் நீதிமன்றங்களில் சமர்பிக்கப்பட்டு, பின்னர் வழக்கில் சேர்க்கப்பட்டது. விசாரணையில் ஆவணங்கள் சேகரிக்கப்பட்ட பின் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எந்த முரண்பாடுகளும் இல்லை” என தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 30ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு.. எதற்காக? - Senthil Balaji Case

Last Updated : Apr 25, 2024, 5:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details