சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டினர்.
அதன் எதிரொலியாக, தமிழ்நாடு அரசு உள்துறை செயலர் அமுதா ஐஏஎஸ், சென்னை காவல் ஆணையராக செயல்பட்டு வந்த சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட 19 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ், நேற்று (புதன்கிழமை) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 12 காவல் மாவட்டங்களின் துணை ஆணையர்களுடன் அதிரடியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டத்தில், 12 காவல் மாவட்டங்களிலும் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளின் கோப்புகள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள ரவுடிகளின் பட்டியல், அதிக குற்றங்கள் நடக்கும் காவல் மாவட்டத்தின் கோப்புகள் அனைத்தையும் காவல் ஆணையர் அருண் கேட்டதாகவும், அந்த கோப்புகள் அனைத்தையும் காவல் ஆணையரிடம் ஒப்படைத்து அது தொடர்பான விளக்கங்களை துணை ஆணையர்கள் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனத் துணை ஆணையர்களுக்கு அருண் ஐபிஎஸ் அறிவுறுத்தினார். சென்னை மாநகரம் முழுவதும் வாகன தணிக்கைகளை அதிகப்படுத்தவும், ரவுடிகளின் பட்டியலை தயாரித்து அவர்களைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும், தலைமறைவாக உள்ள ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் ஆலோசனைக் கூட்டத்தில் காவல் ஆணையர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோல, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன், காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி ரவுடிகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் கண்டிப்பாக ரோந்து செல்ல வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு போலீசார் மீது நம்பிக்கை அதிகரிக்கும், ரவுடிகளின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு முதலே இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் ரோந்து பணியைத் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மற்ற இழப்பீட்டை ஒப்பிடுகையில் பேனர் விழுந்து சிறுவன் பலியானதில் இழப்பீடு போதுமா? மீண்டும் நீதிமன்றம் கேள்வி!