சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது தமிழக கடற்கரை பகுதி நோக்கி நகர்ந்து வருவதாகவும், நாளை சூறாவளிப்புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் நிலையில், இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நவம்பர் 26, 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறைப்படி, இந்த முறை சவுதி அரேபியா நாடு பரிந்துரைத்த ‘ஃபெங்கல்’ (FENGAL Cyclone) என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ.27) புயலாக வலுப்பெறக் கூடும்.
அதன் அடிப்படையில், இன்று (நவ.26) மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும்.
அதேபோல, நாளை (நவ.27) கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்; திருவாரூர் தொடங்கி புதுக்கோட்டை வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும். நாளை மறுநாள் (நவ.28) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிககன மழையும்; திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது.