சென்னை: ஊரக உள்ளாட்சிகளுக்கான பதவி காலம் நேற்றுடன் (ஜனவரி 5) முடிவடைந்த நிலையில், அப்பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படி என்றால் மாநில தேர்தல் ஆணையத்தால் 45 நாட்களுக்கு முன்பே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், வெளியிடவில்லை. அதற்கான வாக்காளர் பட்டியலும் வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் அதுவும், வெளியிடவில்லை. எனவே ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமனம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதா? என கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக தனி அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு, சட்டப்பேரவை மசோதா தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் தமிழக சட்டப்பேரவை இன்று (ஜனவரி 6) ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது. தற்போது நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டுள்ளதால் 28 மாவட்டங்களுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
இந்நிலையில், சட்டப்படி கிராம பஞ்சாயத்துக்களை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நிர்வாகம் செய்வார்கள். அதேபோல், மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களை 2 பகுதியாக பிரித்து, ஒரு பகுதியை உதவி இயக்குநர், மற்றொரு பகுதியை உதவி இயக்குநர் (தணிக்கை), மாவட்ட ஊராட்சியை அந்த மாவட்டத்தில் உள்ள திட்ட அலுவலர் ஆகியோர் நிர்வாகம் செய்வார்கள்.
இதையும் படிங்க: பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது ஏன்? ராஜ்பவன் விளக்கமும், சபாநாயகர் பதிலும்!
உள்ளாட்சிகளில் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கு மட்டுமே காசோலை அதிகாரம் உள்ளது. ஆனால் நேற்றுடன் அவர்களது பதிவி காலம் நிறைவுப்பெற்றதால், இன்றிலிருந்து அவர்கள் பணப் பரிமாற்றம் செய்ய முடியாது. இந்நிலையில் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்ட சட்டப்பேரவை கூட்டத் தொடர் அடுத்த ஐந்து நாட்களுக்கு வரும் சனிக்கிழமை ஜனவரி 11ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், இது குறித்து மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிணைந்து முழுமையாக தேர்தல் நடத்தப்பட்டது. இதன் பதவி காலம் 2016ஆம் ஆண்டு முடிந்தது. அதன்பின் தேர்தல் நடத்தப்படவில்லை. தனி அலுவலர்கள் மூலம் உள்ளாட்சிகள் நிர்வகிக்கப்பட்டன.
இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 27, 28ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தல் மூலம் 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு தேர்தல் நடந்தன.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பொறுப்பேற்றனர். இவர்களது பதவிக்காலம் நேற்று ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது.