சென்னை : தென்மேற்கு பருவமழை முடிந்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, "தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப் 30 வரை தமிழகம், புதுவை, காரைக்காலில் பதிவான மழையின் அளவு 39 செ.மீ ஆக உள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 33 செ.மீ இயல்பை விட 18% அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. 19% வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் பட்சத்தில் இயல்பான அளவாகவே கருதப்படுகிறது.
17 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பான அளவிலும், 6 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பதிவாகி உள்ளது. தஞ்சை, புதுக்கோட்டை நீங்கலாக டெல்டா மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாக மழை பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க :வடகிழக்கு பருவமழை; பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
தென்மேற்கு பருவமழை கடந்தாண்டை ஒப்பிடும் போது தமிழகத்தில் இயல்பை விட 14% அதிகமாக மழை பதிவாகி உள்ளது. கடந்தாண்டு 8 % இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகி உள்ளது. சென்னையில் கடந்தாண்டு 74 %, இந்தாண்டு 43% இயல்பை விட அதிகமாக மழை பதிவாகி உள்ளது.
பாலச்சந்திரன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) கேரளா, தமிழகம், தெற்கு கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் இயல்பை விட அதிகமாகவும், தென் தமிழகத்தில் இயல்பை விட குறைவாகவும் வடகிழக்கு பருவமழை பதிவாக வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை, அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. 3 மற்றும் 4 வது வாரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வட தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும். தென் தமிழகத்தில் இயல்பை விட குறைவாக இருக்கும்" என்றும் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்