சென்னை: கடந்த 5ஆம் தேதி நுங்கம்பாக்கம் 4வது தெருவில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் பூங்காவை பராமரித்து வரும் சோனியா என்பவரின் 5 வயது மகளான சுரக்ஷா என்பவரை பூங்காவின் எதிரில் வசிக்கும் புகழேந்தி வளர்த்துவரும் 2 ராட்விலர் இன நாய்கள் அவரின் மேற்பார்வை இல்லாமல் வீட்டிலிருந்து வெளியே வந்து பூங்காவில் இருந்த குழந்தையை கடித்து குதறியதால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையும், பின்னர் அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனையில் மேல்சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வை தொடர்ந்து செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் அதற்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்று இருக்க வேண்டும். செல்லப் பிராணிகளுக்கு வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்கவும், பொது இடங்களுக்கு அழைத்து செல்லும்போது கழுத்துப் பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்லக்கூடாது.
வெளி நபர்களிடம் அச்சம்மூட்டும் வகையிலும், திடீரென பாயும் தன்மைகொண்ட நாயாக இருந்தால் அந்த நாய்களை கட்டுப்பாடின்றி மற்றும் முகமூடி (Muzzle) இல்லாமல் வெளியே கொண்டு செல்லக்கூடாது. மேலும் தெருக்களிலோ, பொது இடத்திலோ ஒரேயொரு செல்லப்பிராணியை குறிப்பாக ஒரேயொரு நாயை மட்டுமே அதன் உரிமையாளர்கள் அழைத்துச் செல்ல வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருத்தல் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே பூங்காக்களுக்குள் அழைத்து செல்ல அனுமதிக்கப்படும். தெரு நாய்கள் அல்லது கட்டி வைக்கப்படாத செல்லப் பிராணிகள் உள்ளே நுழைவது தடுக்கப்படும்.
பூங்காக்களில் உள்ள குழந்தைகள் விளையாடும் பகுதிக்கு வளர்ப்பு நாய்களை எடுத்துச் செல்வதும் தடை செய்யப்படும். இந்திய பிராணிகள் நல வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இதனை மீறி உரிமம் பெறாமல் மற்றும் தொடர்ந்து ஆபத்து ஏற்படும் வகையில் செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் பொது இடங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் அவற்றை கையாண்டால், அந்த நாயின் உரிமையாளரின் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகாரட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.