சென்னையில் புதிதாக 41 குளங்கள்; வெள்ள பாதிப்பை தடுக்க முயற்சி! - CHENNAI CORPORATION
சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், மழை நீரை சேகரித்து அதன் மூலம் நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையிலும் புதிதாக 41 குளங்களை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.
சென்னை:சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் சென்னை மாநகராட்சி மழை நீரை சேகரித்து வைக்கவும், அதன் மூலம் நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையிலும் புதிதாக 41 குளங்களை உருவாக்கியுள்ளது. மேலும், இதுகுறித்து பொதுமக்களிடம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் புதிய குளங்களை அமைத்ததாகவும், மேலும் மழைநீர் தேங்கும் இடங்களில் புதிய குளங்களை அமைக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக வெள்ள பாதிப்பை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய பணிகள் தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (பணிகள்) சிவ கிருஷ்ணமூர்த்தி விவரித்தார். அப்போது, விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் தெரு மற்றும் வளசரவாக்கம் மற்றும் வேளச்சேரி மற்றும் கிண்டி ரேஸ் கிளப் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், நடைபெற உள்ள பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்குட்டபட்ட பகுதிகளில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் இருந்த வேளச்சேரி, வீராங்கள் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் சமீபத்தில் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கபட்டது. அதன்பிறகு, இந்த கால்வாய்களை ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் விருகம்பாக்கம் கால்வாய் 6.5 கி.மீ பயணித்து, கூவம் ஆறு வழியாக கடலில் கலக்கிறது.
வெள்ளப்பெருக்கைத் தடுக்க திட்டம்:
சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி பணிகள் குறித்து விவரிக்கும் காட்சி (ETV Bharat Tamil Nadu)
இந்த கால்வாய் பயணிக்கும் மொத்த தொலைவில் மொத்தம் 28 பெரிய பாலங்கள் (culvert) உள்ளது. விருகம்பாக்கம் கால்வாய் துவங்க கூடிய இடத்தில் இருக்கும் பாலத்தின் அகலம் 18 மீட்டரில் இருந்து குடியிருப்பு பகுதிகள் அடர்த்தியாக இருக்கும் இடங்களில் 12,5,6 என சுருங்கியுள்ளது. இதன் காரணமாக, 1,700 கன அடி மழைநீர் செல்ல வேண்டிய இடங்களில் 800 கன அடி மட்டுமே செல்கிறது. அதனால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
குறிப்பாக MMDA மெட்ரோ, வடபழனி 100 அடி சாலையில் ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்பகுதி உள்ளிட்ட 12 இடங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக உள்ள சிறிய குறுகிய பாலங்களை இடித்து உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மேம்படுத்த ஐஐடி உதவியுடன் அறிவியல் பூர்வமான (பேத்தொமெட்ரி) ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தேவைப்படும் இடங்களில் கூவம் ஆற்றில் கலக்க கூடிய பகுதிகளில் புதிய கால்வாயை அமைத்து கூவம் ஆற்றில் இணைக்க சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்படுகிறது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்:
தூர்வாரும் பணிகள் (ETV Bharat Tamil Nadu)
இப்பணிகளுக்காக இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றி சட்டபூர்வமான நடவடிக்கைகளை அடுத்தாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், கால்வாயை தூர்வாரும் பணியில் 1,500 டன் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளின் காரணமாக 25 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்காமல் பாதுகாக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் கடந்த 6 மாத காலங்களில் சகதியாகவும், பராமரிக்கப்படாமல் இருந்த 41 இடங்களை கண்டறிந்து புதிய குளங்களை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் அருகில் உள்ள வக்பு வாரியத்திற்கு சொந்தமான மூன்று ஏக்கர் இடத்தில் தூர்வாரப்படாமல் பராமரிப்பு இன்றி இருந்த பழைய குளத்தை கைப்பற்றி சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சி 75 லட்சம் செலவில் புனரமைத்திருக்கிறது.
கடைசியாக 1994ஆம் ஆண்டு இந்த குளம் தூர்வாரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இம்முறை புனரமைப்பின் போது 15 அடி அளவிற்கு ஆழப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 54 எம்எல்டி தண்ணீர் இதில் சேமிக்கப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து வெளியேறும் உபரி நீர், மழை நீர் கால்வாய் வழியாக கொண்டு செல்லப்பட்டு அருகில் உள்ள நீர் வழித்தடத்துடன் இணைக்க பணிகள் செய்யப்பட்டுள்ளது.
பூங்காவில் குளம்:
சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி பணிகள் குறித்து விவரிக்கும் காட்சி (ETV Bharat Tamil Nadu)
வளசரவாக்கம் எஸ்.வி.எஸ் நகரில் 7.5 ஏக்கர் பரப்பளவில் புதிய சூழலியல் பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலியல் பூங்காவில் 2.83 ஏக்கர் கட்டாந்தரையாக இருந்த இடத்தை 60 எம்எல்டி கொள்ளளவு கொண்ட புதிய குளமாக மாற்றியுள்ளது சென்னை மாநகராட்சி. இப்பூங்காவில் வாகன நிறுத்தம், நடைப்பயிற்சி செய்வதற்கான நடைபாதை, வெளிப்புற உடற்பயிற்சி கூடம், பேட்மிட்டன் கோர்ட், திறந்த வெளி அரங்கம், படகு குழாம், குழந்தைகள் விளையாடும் இடம், பறவைகள் தீவு, ஒப்பனை அறை, நவீன மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இடம் பெறவுள்ளது எனத் தெரிவித்தனர்.
இந்த பூங்காவில் குளம் அமைப்பதன் மூலம் எஸ்பிஎஸ் நகர் போரூர், வளசரவாக்கம், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாது. 15 முதல் 17 செ.மீ வரை பொழியக்கூடிய மழையை சேமிக்க முடியும் என்றும், வேளச்சேரி மற்றும் கிண்டி ரேஸ் கிளப்பில் உருவாக்கப்பட்டுள்ள 4 குளங்களையும் அங்கு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விவரித்தனர்.
மழை நீர் கடலில் கலக்க ஏற்பாடு:
சென்னையில் உள்ள குளம் (ETV Bharat Tamil Nadu)
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி,"பருவமழை காலங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. கொசஸ்தலை, கூவம், அடையாறு ஆகிய ஆறுகள் தான் மிக முக்கியமானது. இதில் மழை நீரை சேர்த்தால் தான் மழை நீர் கடலில் சேரும். தற்போதைய சூழலில் நகருக்குள் 3,050 கி.மீ நீளத்திற்கு மழை நீர் வடிக்கால்வாய்கள் அமைத்திருக்கிறோம்.
கொசஸ்தலை ஆற்றில் இருந்து 600 கி.மீ தொலைவிலும், மத்திய நகரிலிருந்து 150 கி.மீ தொலைவிலும், கோவளம் பகுதியிலிருந்து 250 கி.மீ தொலைவிலும் மழை நீர் வடிகால்வாய்கள் உள்ளது. மேலும், மொத்தமாக 3,050 கி.மீ நீளத்திற்கு மழை நீர் வடிகால்வாய்கள் பயன்பாட்டில் உள்ளது. விருகம்பாக்கம், ஓட்டேரி கால்வாய்களை சேர்த்து 35 சிறிய வகை கால்வாய்களோடு இணைத்து அடையார், கூவம், கொசஸ்தலை ஆற்றோடு சேர்ந்து கடலில் கலக்கக்கூடிய வகையில் தான் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
41 இடங்களில் குளம்:
பொதுவாக மழை நீர் தோங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்போம். தற்போது மழை நீரை சேகரித்து வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 225 குளங்கள் உள்ளது.
அதை தூர்வாரும் பணிகளும், புனரமைக்கும் பணிகளும் கடந்த 3 ஆண்டுகளாக சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. குளம் அமைத்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மணலி, மாதாவரம், விருகம்பாக்கம், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி உள்ளிட்ட 41 இடங்களில் குளங்கள் அமைத்து, அதில் மழை நீரையும் சேமித்து வருகிறோம்.
நிலத்தடி நீர்மட்டம் உயரும்:
சென்னையில் உள்ள குளம் (ETV Bharat Tamil Nadu)
கிண்டி ரேஸ் கிளப்பில் 118 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அதில் 4 குளங்கள் அமைத்து, மழை நீரை சேமித்து வருகிறோம். மழை நீரை 5 முதல் 6 மடங்கு அதிகமாக சேமித்து இருக்கிறோம். இந்த இடத்தில் மழை நீரை சேமித்து வைத்துள்ளதால், 5 லட்சம் வீடுகள் மற்றும் சாலைகளில் மழை நீர் தோங்காமல் இருக்கும். குளங்கள் இல்லாத போது, இங்கே இருந்து வெளியேறும் மழை நீரானது வேளச்சேரி, பல்லாவரம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வழியாக முட்டுக்காடு செல்லும். இதுதான் ஏற்கனவே இருக்கும் நமைுறை.
தற்போது மழை நீரை இங்கே சேமித்து வைக்கிறோம். இதில் இரண்டு பலன்கள் உள்ளது. வேளச்சேரி சாலைகளில் வெள்ளம் சேராமல் தடுக்க முடியும். இரண்டாவதாக நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும், மழை நீர் தேங்கி நிற்கக் கூடிய பகுதிகளில் குளங்கள் முன்னெடுப்பை மேற்கொள்ள பல தரப்பு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், இந்த குளங்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது.
இதில், மக்களின் ஒத்துழைப்பும் முக்கியமானது. வருங்காலங்களில் நிறைய குளங்களை சென்னை மாநகராட்சி உருவாக்கும். இந்த கிண்டி ரேஸ் கிளப்பில் சேகரித்து வைக்கும் மழை நீர் அதிகமானால் கூடுதலாக இங்கே குளங்கள் அமைக்கலாமா அல்லது அருகில் உள்ள இடத்தில் குளங்கள் அமைக்கலாமா என்பதுக்கான சாத்தியக்கூறுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.