சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் 20 செமீ-க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக செய்யப்பட்டு வருகிறது.
மேலும், சென்னை மாநகராட்சியில் மழை தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதில், 1913, 044-2561 9207, 044-2561 9204, 044-2561 9206 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு மழை பாதிப்பு தொடர்பான புகாரை அளிக்கலாம் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை மாநகராட்சி அவசர கால கட்டுப்பாட்டு அறையின் ஒருங்கணைப்பாளர் ராஜேஷ்வரி ஈடிவி பாரத்திடம் கூறியதாவது, “ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், சென்னை மாநகராட்சியில் 24 மணி நேரமும் பொதுமக்களின் சேவைக்காக இயங்கி வருகிறது. இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐஓடி டிவைஸ் (IoT device), சென்சார் ப்ளட் கேமரா (flood cam), ப்ளட் சென்சார் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
தயார் நிலையில் மாநகராட்சி ஊழியர்கள்:ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தண்ணீர் செல்லும் பொழுது, அதனை துள்ளியமாக கண்காணித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வருகிறோம். தகவல் தெரிவித்தவுடன் பாதிப்படைந்த இடத்தில் இருக்கக்கூடிய மாநகராட்சி ஊழியர்கள், தேங்கி நிற்கக்கூடிய மழை நீரை மோட்டார்கள் மூலமாக வெளியேற்றும் பணியில் உடனடியாக ஈடுபட்டு வருகின்றனர்.
அவர உதவி எண் 1913: சென்னை மாநகராட்சியின் அவர உதவி எண் 1913, சென்னை மாநகராட்சி அவசர கட்டுப்பாட்டு கால் சென்டர் உடன் இணைக்கப்பட்டு, பொதுமக்களின் புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவசர கட்டுப்பாட்டு கால் சென்டரில் ஒரு ஷிப்ட்க்கு 150 பணியாளர்கள் பணியில் இருப்பதினால் 24 மணி நேரமும் முழுமையாக இயங்கி வருகிறது. அவசர உதவி எண் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை உடனடியாக பதிவு செய்து, இது தொடர்பான அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.